எம்ஜிஆர் பாடலை கூறி, கட்சியினருக்கு சேதி சொன்ன ஓபிஎஸ்…! பரபரப்பை ஏற்படுத்தும் முதல்வர் வேட்பாளர் விவகாரம்

14 August 2020, 10:38 am
Quick Share

சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி என்பது இப்போதைய கடமை என்று அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் சொல்லி உள்ளது, பல விஷயங்களை தொண்டர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி உள்ளது.

அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் விவகாரங்கள், இதுவரை அக்கட்சியில் பேசப்படாத ஒரு விஷயம். அதுதான் யார் 2021ம் ஆண்டில் தமிழக முதலமைச்சர்? அதாவது அதிமுகவில் யாருக்கு முதலமைச்சர் அரியாசனம் என்பது.

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த கட்சி பல சோதனைகளை கடந்து சாதனைகளை படைத்திருந்தாலும் இப்போது எழுப்பப்பட்டு வரும் இந்த விஷயம் மிக முக்கியமானது. காரணம் மக்கள் நடப்பதை உன்னிப்பாக பார்த்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தை முதலில் தொடங்கி வைத்தவர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் முடிவு எடுப்பார்கள். ஏன் என்றால் எம்ஜிஆரோ தம்மை முதலமைச்சர் வேட்பாளர் அறிவித்துக் கொண்டதில்லை. மக்கள் தான் அவரை தேர்ந்தெடுத்தனர்.

Sellur raju - updatenews360

ஜெயலலிதாவையும் மக்கள் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர். ஆகவே எம்எல்ஏக்கள் யார் கூடி முதலமைச்சர் என்கிறார்களோ அவர் தான் முதலமைச்சர் என்று ஒரு போடு போட்டார். இவரை போன்று பளிச் பேட்டிகளால் பரபரப்பை ஏற்படுத்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் எடப்பாடியார் முதல்வர் என்று ஒரு டுவிட் போட்டு மேலும் பரபரப்பூட்டினார்.

எடப்பாடியாரை முன்னிறுத்தியே களத்தில் இறங்கி வெற்றி பெறுவோம் என்று கூறினார். இந்த 2 அமைச்சர்களின் விவாதங்கள் வெவ்வேறு கோணத்தில் இருக்க, பரபரப்பு எழுந்தது. எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் உதயகுமாரும் தமது பங்குக்கு ஒரு கருத்தை முன் வைத்தார்.

Udayakumar updatenews360

இதையடுத்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஒரு முக்கிய விஷயத்தை கட்சியினருக்கு கூறி உள்ளார். அந்த செய்தியை தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!  என்று தெரிவித்து உள்ளார்.

பின்னர், அதில் ஒரு எம்ஜிஆர் பாடலையும் மேற்கோள் காட்டி தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்த விவகாரத்தை ஆளாளுக்கு முன் வைத்து கருத்துகளை கூற வேண்டும். நமது லட்சியம், குறிக்கோள் 2021ம் ஆண்டு, 3வது முறையாக அதிமுகவை அரியணையில் ஏற்றுவது, ஆகவே அதற்காக ஒற்றுமையாக இருந்து, வெற்றி பெற வேண்டும், நாளையும் நமது தான் என்று பணியாற்றுங்கள் என்று கூறி உள்ளார்.

மேலும், சட்டசபை தேர்தல் வெற்றி, அதன்பிறகு முதலமைச்சர் வேட்பாளர் என்பதையும் அவர் மறைமுகமாகவே கட்சியினருக்கு உணர்த்தி இருக்கிறார். ஆகையால், இந்த வேண்டுகோளை ஏற்று தொண்டர்கள் செயல்படுவார்கள் என்பதே அக்கட்சியின் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு…!!

Views: - 0

0

0