இந்தோனேசியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப்பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..!
14 January 2021, 6:18 pmஉலகின் மிகப் பழமையான 45,000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவில் சுமார் 45,500 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் வாழ்க்கை அளவிலான படம், நேற்று சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்டதோடு இப்பகுதியின் மனித குடியேற்றத்திற்கான ஆரம்ப சான்றுகளை வழங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் இணை எழுத்தாளர் மாக்சிம் ஆபெர்ட், 2017’ஆம் ஆண்டில் சுலவேசி தீவில் முனைவர் மாணவர் பஸ்ரான் புர்ஹானால் இந்த குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்தோனேசிய அதிகாரிகளின் ஒரு குழுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ஆய்வின் ஒரு பகுதியாக இது கண்டறியப்பட்டுள்ளது.
லியாங் டெடோங்ங்கே குகை ஒரு தொலைதூர பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுவதால் வறண்ட காலங்களில் மட்டுமே இதை அணுக முடியும். மேலும் புகிஸ் பழங்குடியின சமூகத்தின் உறுப்பினர்கள், இந்த குகை ஓவியம் மேற்கத்திய நாடுகளால் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்படவில்லை என ஆய்வுக் குழுவிடம் தெரிவித்தனர்.
136 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 54 சென்டிமீட்டர் அகலத்தில் சுலவேசி வார்டி பன்றி அடர் சிவப்பு ஓச்சர் நிறமியைப் பயன்படுத்தி வர்ணம் பூசப்பட்டுள்ளது மற்றும் நிமிர்ந்த கூந்தலின் குறுகிய முகடு கொண்டது. அத்துடன் ஒரு ஜோடி கொம்பு போன்ற முக மருக்கள் இருப்பதால் நன்கு வளர்ந்த ஆண் பன்றியைக் குறிக்கிறது.
மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுலவேசி வார்டி பன்றிகளை வேட்டையாடி வருகின்றனர், மேலும் அவை பிராந்தியத்தின் வரலாற்றுக்கு முந்தைய, குறிப்பாக பனியுகத்தின் கலைப்படைப்புகளின் முக்கிய அம்சமாகும்.
இதற்கு முன்னர் பழமையான குகை ஓவியம் அதே குழுவினரால் சுலவேசியில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது சுமார் 43,900 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டது.
இது போன்ற குகை ஓவியங்களும் ஆரம்பகால மனித இடம்பெயர்வுகளைப் பற்றிய நமது புரிதலைப் பற்றிய இடைவெளிகளை நிரப்ப உதவுகின்றன. 65,000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஆஸ்திரேலியாவை அடைந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர்கள் இந்தோனேசியாவின் தீவுகளைக் கடக்க நேரிட்டிருக்கும். இது “வாலேசியா” என்று அழைக்கப்படுகிறது.
இந்த தளம் இப்போது வாலேசியாவில் உள்ள மனிதர்களின் மிகப் பழமையான ஆதாரங்களைக் குறிக்கிறது. ஆனால் மேலதிக ஆராய்ச்சி இப்பகுதியில் மக்கள் முன்பே இருந்ததைக் காட்ட உதவும். இது ஆஸ்திரேலியா குடியேற்ற புதிரைத் தீர்க்கும். அழிந்து போன டெனிசோவான்ஸ் போன்ற மனித இனங்களுக்கு மாறாக, ஹோமோ சேபியன்களால் இந்த கலைப்படைப்பு உருவாக்கப்பட்டது என்று குழு நம்புகிறது. ஆனால் இதை உறுதியாக சொல்ல முடியாது.