முதல் ஆளாக துண்டு போட்ட கமல்… மம்தா பந்தியில் ம.நீ.ம.வுக்கு இடம் கிடைக்குமா… ? சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி!!!

Author: Babu Lakshmanan
4 August 2021, 5:24 pm
Kamal - updatenews360
Quick Share

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் என்பதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

எகிறிய பி.கே.வின் மவுசு

கடந்த சில வாரங்களாக இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், பல்வேறு கட்சிகளின் தலைவர்களை தினமும் நேரடியாகவும், ரகசியமாகவும் சந்தித்துப் பேசி வருகிறார்.

ஆந்திரா, டெல்லி, தமிழகம், மேற்கு வங்காளம் என 4 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வகுத்துக் கொடுத்த வியூகங்கள் பலன் அளித்ததால் அவரை எதிர்க்கட்சிகள் இப்போது மலைபோல் நம்பி உள்ளன.

Prasanth-Kishore-updatenews360

அதனால்தான் ராகுல் காந்தி கூட பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் இணையுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். ஆனால் மம்தா பானர்ஜி கிழித்த கோட்டை தாண்டாமல் செயல்பட்டு வருவதால் பிரசாந்த் கிஷோர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதேநேரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகளை இணைக்க முயற்சி செய்தால்,
அது பலனளிக்காமல் போய் விடக்கூடும் என்பதால் மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்.

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும், அக்கட்சிகளின் முக்கிய எம்பிக்களையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

மம்தா பக்கம் திரும்பிய மய்யம்

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போன்றவை இருப்பதால் இந்தக் கட்சிகளும் பிரசாந்த் கிஷோர் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான வரிசையில் இணைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர திமுக கூட்டணியில் 10 சிறுசிறு கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி திரட்டும் எதிர்க்கட்சிகள் அணியில், தமிழகத்திலிருந்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைவதற்கு தயார் என அறிவித்து இருக்கிறது.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல் “அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் எங்களை அழைத்தால் நாங்களும் அவருடைய கூட்டணியில் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே கமலுக்கு ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோருடன் நெருக்கமான நட்பு உள்ளதால் அவர்கள் மூலமும் தேசிய எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதற்கு மக்கள் நீதி மய்யம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுகவுடன் கமல் கூட்டணி

அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நடிகர் கமல் இன்னும் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறார். இதுவும், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.

கமல் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார் என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.

இதுதான், மம்தா பானர்ஜிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைத்துக் கொள்ளப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலின்போது, அவருடைய கட்சிக்கு குறைந்தபட்சம் 2 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு ஏற்படும்.

kamal - stalin - updatenews360

கமல் கட்சி உள்ளே வருவதால் திமுக கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து விடுவதற்கும் வாய்ப்பு உண்டு. அதாவது விசிக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படலாம்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள சிறு சிறு கட்சிகள் மக்கள் நீதி மய்யத்தின் வரவை விரும்பவில்லை என்பதே நிஜம்.

அதேநேரம் புதிய நாடாளுமன்ற கட்டிடம், திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் மத்திய பாஜக அரசு, எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகையின் அடிப்படையில் 750 தொகுதிகளுக்கு குறையாமல் உயர்த்தி 2023-ம் ஆண்டே தேர்தலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு எம்பிக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரிக்கும்போது தமிழகத்தில்
65 முதல் 70 எம்பிக்கள் தொகுதிகள் உருவாக்கப்படலாம். அதுபோன்ற நிலை ஏற்பட்டால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 அல்லது 3 தொகுதிகள் கூட திமுக கூட்டணியில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் தற்போதுள்ள 39 தொகுதிகள் என்ற நிலையே 2024 தேர்தலிலும் தொடர்ந்து நீடித்தால், கமல் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு சீட் மட்டும் கிடைக்கலாம்.

போட்டியிடுவதில் சிக்கல்

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் டெல்லியைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, சிரோமணி அகாலி தளம், போன்றவையும் தங்களுடைய செல்வாக்கை தனிப்பட்ட முறையில் நிரூபிக்க முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த கட்சிகள் அதிக பட்சம் எவ்வளவு தொகுதிகளில் போட்டியிட முடியுமோ, அத்தனை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும்.

அப்போதுதான் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க நேர்ந்தால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை வாதாடி பெறமுடியும். அதனால் தற்போது 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப் பட்டாலும் சரி, தொகுதிகளின் எண்ணிக்கை 750 வரை அதிகரிக்கபட்டாலும் சரி மாநிலங்களில் வலிமையாக உள்ள எதிர்க்கட்சிகள் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பும் என்பதே எதார்த்த நிலை.

parliment - updatenews360

இதுதவிர தற்போது யார் பக்கமும் இல்லாமல் நடுநிலையாக உள்ள பிஜு ஜனதாதளம், இந்திய தேசிய லோக் தளம் போன்றவை சில மாநிலங்களில் பிரதான கட்சிகளாக உள்ளன.

14, 15 எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைந்தால் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும்,மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், மராட்டியத்தில் சிவசேனாவும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக அமையும்.

வலியச் சென்று ஆதரவு… கைகூடுமா..?

இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் 5-வது இடத்தில் உள்ள நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மம்தா அமைக்கும் எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். அப்படியே சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்குவதற்கு வாய்ப்பு உண்டு. அதுவும் திமுக மனது வைத்தால்தான் மட்டுமே நடக்கும்.

எதிர்க்கட்சிகள் அணியில் சேரத் தயார் என்று கமல் அறிவித்ததன் மூலம் அவர் தானாகவே இறங்கி வந்திருப்பது தெரிகிறது. அதை அவர் தவிர்த்து இருந்தால் மம்தா, கெஜ்ரிவால், பினராயி விஜயன் மூவருமே கமலின் மக்கள் நீதி மய்யம் தங்கள் அணியில் இருந்தால் நல்லது என்று நினைத்திருக்க வாய்ப்பு இருந்தது. தற்போது கமல் வலியச் சென்று ஆதரவை கேட்டிருக்கிறார்.

அது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை இப்போதைக்கு கூற இயலாது. ஏனென்றால் கமலை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் எந்த அளவிற்கு வலு கிடைக்கும் என்பதை அத்தனை கட்சிகளும் கணக்குப்போடும்.

தற்போதைக்கு அவரால் தேசிய அளவிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு எந்தப் லாபமும் இல்லை என்பதே உண்மை. மேலும் தேசிய அளவில் கமல் கட்சி 40 அல்லது 45-வது இடத்தில்தான் இருக்கும்.
அதனால் மம்தா அமைக்கும் எதிர்க்கட்சிகள் மெகா பந்தியில் மக்கள் நீதி மய்யத்திற்கு இடம் கிடைப்பது கடினம்தான்” என்று விளக்கமாக குறிப்பிட்டனர்.

தமிழக அரசியல் விமர்சகர்களோ, “கமல் சற்று அவசரப்பட்டு விட்டார். 9 மாவட்ட ஊராட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தனது கட்சியின் பலத்தை நிரூபித்து விட்டு, தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் அவர் இணைய விரும்பி இருந்தால் அவருக்கு மதிப்பு கிடைத்திருக்கும். ஆனால் அவர் முன் கூட்டியே தனக்குள்ள ஆசைகளை வெளியிட்டுவிட்டதால் அவரை தேசிய கட்சிகள் கண்டுகொள்ளுமா? என்பது சந்தேகமே” என்கின்றனர்.

அழையா விருந்தாளியாக வருபவர்களுக்கு அரசியலில் மட்டுமல்ல எங்குமே மதிப்பும், மரியாதையும் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அது நடிகர் கமலுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான்!

Views: - 354

0

0