கோட்டையில் கொடியேற்றுவோம்…! திருமாவின் திடீர் கொந்தளிப்பு!! திமுக கூட்டணியில் நீடிக்குமா..?

Author: Babu Lakshmanan
25 September 2021, 8:23 pm
Quick Share

சேலம் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கொந்தளிக்க வைத்துள்ளது. அவருடைய ஆவேசம் திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து நீடிக்குமா? என்ற ஒரு பெரிய கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

அப்படி என்ன சம்பவம் சேலத்தில் நடந்தது?…

கொடிக்கம்பத்தால் பிரச்சனை

அந்த மாவட்டத்தின் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள கணவாய் புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது, கே.மோரூர். இந்த ஊரின் பஸ் நிறுத்தம் அருகே அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் என்று அத்தனை கட்சிகளின் கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைப்பதற்கு கோரிக்கை மனு அளித்திருந்தும் மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

4 வருடங்களுக்கு முன்பு, இந்த இடத்தில் இனி மேல் யாரும் கொடிக்கம்பம் நடக்கூடாது என்றும், கொடிக்கம்பம் வைக்க விரும்புபவர்கள் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற வேண்டும் என்றும் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Thirumavalavan Press Meet- updatenews360

இந்த நிலையில்தான், திருமாவளவனின் சேலம் வருகையையொட்டி கே.மோரூர் பஸ் நிறுத்தம் அருகே விசிகவினர், தங்களது கட்சியின் கொடி கம்பத்தை நடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரியுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அங்கு போலீசும் குவிக்கப்பட்டது.

இதற்கிடையே கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அந்த இடத்தில் இருப்பதால் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கருதிய மாவட்ட நிர்வாகம் அடுத்த ஒரு வாரத்துக்குள் அங்கிருக்கும் அத்தனை கொடிக் கம்பங்களையும் அகற்றுவது என்ற முடிவை அண்மையில் எடுத்தது. ஆனால் அங்கு எங்கள் கட்சியின் கொடிக்கம்பத்தையும் வைத்து விடுகிறோம். பின்னர் நீங்கள் அகற்றும்போது எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துவிடுங்கள் என்று விசிகவினர் மல்லுக்கட்டி இருக்கின்றனர்.

போலீசாருடன் மோதல்

அதுமட்டுமின்றி கடந்த 23-ம் தேதி விசிகவை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து தங்களது கட்சியின் கொடிக் கம்பத்தை நடுவதற்கும் முயற்சித்துள்ளனர். அதை போலீசார் தடுத்தனர்.

அப்போது,சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபிநவ் பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும், கே.மோரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இதற்கு இன்னொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினர் இடையேயும் பயங்கர மோதல் வெடித்தது.

VCK - Updatenews360

சரமாரியாக சோடா பாட்டில்களும், கற்களும் சரமாரியாக வீசப்பட்டது. இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்களும் பொதுமக்கள் தரப்பில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடித்தனர். தவிர விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அங்கு கொடிக்கம்பம் வைக்கவும் விடவில்லை.

இப்பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. எந்த நேரமும் வன்முறை அரங்கேறலாம் என்ற பதற்றம் நிலவுவதால் அங்கு தொடர்ந்து போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

அரசே இது என்ன நீதி?

இந்த நிகழ்வுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கடுமையான எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கிறது. “ஆளும் கட்சி கூட்டணியில் நாம் இருக்கிறோம். ஆனாலும் போலீஸ் நம்மீதே நடவடிக்கை எடுக்கிறது. கட்சியின் கொடிக்கம்பத்தையும் நடுவதற்கு விடமாட்டேன் என்கிறார்களே” என்று அவர் கொந்தளித்துப் போனார்.

அந்த கோபத்தில்தான் உடனடியாக ட்விட்டரில் ஒரு பதிவை போட்டார். அதில் “பொது இடங்களில் விசிக கொடியை ஏற்றக் கூடாதா? அனைத்துக் கட்சிக் கொடிகளும் பறக்கும் இடத்தில் சிறுத்தைகள் கொடி பறக்கக் கூடாதா? சாதிவெறிக் கும்பலை காரணம் காட்டுவது சட்ட பூர்வமான அணுகுமுறையா?அரசே இது என்ன நீதி?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Thirumavalavan - stalin - updatenews360

மேலும், “சேலம் மாவட்ட காவல்துறையினர் சாதி வெறியுடன் கைகோர்த்துக் கொண்டு நடத்திய வன்முறை” என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்த நிலையில்தான், ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்ட காவல் துறையை கண்டித்து நடக்கும் போராட்டம் என்றாலும் கூட, இது திமுக அரசுக்கு எதிரான போராட்டமாகத்தான், அனைவராலும் பார்க்கப்படுகிறது.

கோட்டையில் கொடியேற்றுவோம்

ஏனென்றால் மாநிலத்தின் காவல்துறை நிர்வாகம் முதலமைச்சர் ஸ்டாலின் வசம்தான் உள்ளது. அதனால் வழக்கம்போல் தோழமையின் சுட்டுதல் என்பதுபோல, திருமாவளவன் கூறியிருக்கிறார், என்றே அரசியல் விமர்சகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

அதேநேரம் கொடிக்கம்ப விஷயத்தில், 2 நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருமாவளவன் தற்போது கடும் அதிருப்தி அடைந்திருப்பதும் தெரிகிறது.
அந்த கொதிப்பு அவரை இன்னொரு ட்வீட்டையும் பதிவிட வைத்துள்ளது.

VCK - police - updatenews360

2015-ம் ஆண்டு மதுரையில் நடந்த விசிக வெள்ளி விழா மாநாட்டில், தனது கட்சியின் கொள்கை பற்றி வலது கரத்தை உயர்த்தி ஆவேசமாக பேசிய புகைப்படத்தை அந்த ட்விட்டில் திருமாவளவன் இணைத்து இருக்கிறார். மேலும், “கொள்கை வெல்லக் களமாடுவோம் -ஆளும் கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்” என்ற வாசகத்தையும் அதில் குறிப்பிட்டும் உள்ளார்.

கூட்டணி நீடிக்குமா..?

இதுப்பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, , “சமீபகாலமாக திமுக மீது திருமாவளவன் கடும் கோபத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விசிகவுக்கு ஒரு சதவீத இடத்தைக் கூட திமுக மாவட்ட செயலாளர்கள் ஒதுக்கவில்லை. ஆனால் அவர் எதிர்பார்த்தது, குறைந்தபட்சம் 3 சதவீத இடங்கள். இந்த நிலையில்தான் சேலம் மாவட்ட கொடிக்கம்ப சம்பவம் அவருக்கு திமுக மீது கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அவரால் இந்தப் பிரச்சனைகளில் முதலமைச்சர் ஸ்டாலினை பகிரங்கமாக
குற்றம்சாட்ட முடியவில்லை.

அதனால் திமுக அரசு என்பதற்குப் பதிலாக சேலம் மாவட்ட காவல்துறை என்று மழுப்புகிறார். இதில் காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்வதற்கு கூட திருமாவளவனுக்கு தைரியம் இல்லாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஏற்கனவே, விழுப்புரம் எம்பி ரவிகுமார் எந்த கட்சியை சேர்ந்தவர்? என்ற வழக்கு அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ரவிகுமார் திமுக சின்னமான உதயசூரியனில் நின்று வெற்றி பெற்றவர் என்றாலும் கூட அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் என்பது அனைவரும் அறிந்த விஷயம், பின்பு எதற்காக ரவிக்குமார் நீதிமன்றத்தை ஏமாற்றுகிறார்? என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு இருப்பது திருமாவளவனை நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் இந்த விஷயங்களில் மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை என்கிற நிலைதான் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

CM Stalin Bill -Updatenews360

கட்சியை வளர்ப்பதற்கு கூட்டணி கட்சியினரே முட்டுக்கட்டை போடுகிறார்களே? என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில்தான் தற்போது அவர் உள்ளார். இதனால் திமுக கூட்டணியில் விசிக நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அதனால்தான், ஆளும் கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரோ, என்னவோ?

Views: - 279

0

0