பேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாட்களில் ஆளுநரே முடிவெடுப்பார் : மத்திய அரசு

21 January 2021, 3:50 pm
Perarivalan - updatenews360
Quick Share

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக, ஆளுநரே முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ‘பேரறிவாளனை விடுதலை செய்யும் முழு அதிகாரம் குடியரசு தலைவருக்கு மட்டும்தான் உள்ளது,” என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலும் ஆராய வேண்டியிருப்பதால், அவர்களை விடுதலை செய்யக் கூடாது எனவும் பதிலளிக்கப்பட்டது.

அப்போது, பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும், மத்திய அரசு தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால், அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, பேரறிவாளனை விடுலை செய்வது தொடர்பாக, குடியரசு தலைவருக்கு பதிலாக ஆளுநரே 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0