உங்களைப் போல ஏமாற்றத் தெரியாது… ஆனா, தமிழகம் மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!!

Author: Babu Lakshmanan
28 April 2022, 5:32 pm
Annamalai Stalin - updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்று கடுமையாக சாடினார்.

மேலும், தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை என்றும், இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் கூறிய அவர், பெட்ரோல் – டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைத்து கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது :- பெட்ரோல் விலையை குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழியை போடுவது யார் என மக்களுக்கு தெரியும். 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை.

stalin assembly - updatenews360

மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை ஒன்றிய அரசு கஷ்டப்படுத்துகிறது. பெட்ரோல் விலையை குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்?, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும்.

கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியது. மத்திய அரசு கூறுவதற்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை தமிழ்நாடு அரசு குறைத்தது. பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார், என்று கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 355 நாட்களை எட்டிவிட்டது. ஆனால், இன்னும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.4ம் குறைப்பதாக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித வாக்குறுதியும் அளிக்காத மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது.

Annamalai Protest - Updatenews360

உக்ரைன் – ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க, ஒருவேளை ரூ.3 கோடி செலவிட்ட முதலமைச்சருக்கு தெரியும், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்று. ஆனால், போருக்கு பிறகு ஜனவரியில் 72.93 டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை ஏப்ரல் மாதத்தில் 111.86 டாலராக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.91,570 கோடியும், துறைமுகங்களை மேம்படுத்த ரூ.106.480 கோடியும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலும், 292 விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா..? என எனக்கு தெரியவில்லை.

மேலும், இந்த திட்டங்களுக்கு எல்லாம் பணம் எங்கிருந்து வரும்..? ஒரு தமிழனாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவேண்டும்.

உங்களைப் போல வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றுவது பிரதமர் மோடிக்கு தெரியாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 674

0

0