PKவிடம் எச்சரிக்கை தேவை! சோனியா, ஸ்டாலினுக்கு கம்யூ. திடீர் அட்வைஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2021, 9:02 pm
அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தற்போது திரைமறைவில் இருந்தவாறு காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறி வருகிறார், என்பது ஊரறிந்த ரகசியம்.
அண்மையில் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்பிக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் பாடம் எடுத்து இருந்தார் என்றும் அவருடைய சொல்படிதான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பெரும் அமளியுடன் முடக்கப்பட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை வழங்கியவர். அவருடைய வியூக அமைப்பால்தான், முதல் முறையாக ஒரு எதிர்க்கட்சிக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைத்தது, என்றும் கூறுவார்கள்.
அரசியலை வர்த்தக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மாற்றியதில் பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்கு உண்டு. இதற்காகவே ‘ஐ பேக்’ என்னும் நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போலவோ, அல்லது அவரது தனித்திறமையாலோ
மாநில சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை அவருடைய வியூகத்திற்கு 7 முறை பலன் கிடைத்திருக்கிறது. 2017-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு அவர் வகுத்துக் கொடுத்த ஒரேயொரு வியூகம் மட்டுமே செல்லுபடியாகவில்லை.
இந்த நிலையில்தான் 2022-ல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் வியூகம் அமைத்துக் கொடுக்குமாறு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த மார்ச் மாதம் பிரசாந்த் கிஷோர் அவருடைய முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த மாநிலத்தில் அவர் நுழைந்ததும் காங்கிரசில் இருந்த இன்னொரு கோஷ்டியின் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மாநில முதலமைச்சரிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்தார்.
முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கும், சித்துவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற மோதல் பகிரங்கமாக வெடித்தது. ஆனால் சோனியா, ராகுல் இருவரிடமும் சித்துவின் கை ஓங்க, அவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நிகழும் களேபரத்தைக் கண்டு முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகிக்கொண்டார்.
இந்த நிலையில்தான் அவரை தேசிய அரசியலுக்கு இழுத்து வர காங்கிரஸ் மேலிடம் பகீரதப் பிரயத்தன முயற்சி மேற்கொண்டு வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்துவதற்கு துருப்புச் சீட்டாக அவரை பயன்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தீவிரம் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவர்கள் மட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இதற்காக கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த மூவரையும் மாறி மாறி சந்தித்து பேசி தேசிய அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார், பிரசாந்த் கிஷோர். தங்களது கட்சியில் சேருமாறு சோனியா அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பே விடுத்துவிட்டார். ஆனால் இதுவரை பிரசாந்த் கிஷோர் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை.
இதற்கு சில முக்கிய காரணங்களை கூறுகின்றனர். கட்சியில் இணைந்து விட்டால் தனது தனித்தன்மை, இமேஜ் அடியோடு போய்விடும், அந்த கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அதேநேரம் கட்சியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையென்றால் அக்கட்சியிலிருந்து வெளியேறி உடனடியாக வேறு கட்சிக்கு தாவவும் முடியாது. இதுபோன்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே அவர் காங்கிரசில் இணையத் தயக்கம் காட்டுகிறார் என்பதும் உண்மை.
அதேநேரம் இப்படி பிரசாந்த் கிஷோர் தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளுக்காக புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், இந்திய கம்யூனிஸ்ட்டும் அவ்வளவாக ரசிக்கவில்லை. பிரசாந்த் கிஷோர் மீது இந்த இரு கட்சிகளுக்கும் ஒருவித பயம் உள்ளது.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாந்த் கிஷோரைக் கண்டு நடு நடுங்குகிறது என்றே சொல்ல வேண்டும். அவர் பற்றி அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பகிரங்க எச்சரிக்கையாகவே கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “மம்தா பானர்ஜியின் ஏஜெண்ட்தான் பிரசாந்த் கிஷோர். அவர் மறைமுகமாக மோடிக்கும் உதவி வருகிறார். இதை சோனியாவும், ராகுலும் உணர்ந்து கொண்டதுபோல் தெரியவில்லை. எதற்கும் பிரசாந்த் கிஷோர் மீது மிகவும் கவனமாக இருங்கள்” என்று எச்சரித்து இருப்பதுடன் அவர்கள் இருவரிடமும் நேரடியாக வேண்டுகோளும் விடுத்திருக்கிறார், சீதாராம் யெச்சூரி.
அது மட்டுமின்றி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடமும், ‘கிஷோரை நம்பாதீர்கள்’ என அவர் அறிவுறுத்தியதாக தெரிய வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் திடீரென இப்படி கூறுவதற்கு என்ன காரணம்?…
இதுதொடர்பாக டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “19 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தனது தலைமையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் இதில் பிரசாந்த் கிஷோர் இணைப்பு பாலமாக செயல்படுவதை கம்யூனிஸ்டுகள் கொஞ்சமும் விரும்பவில்லை.
தற்போது மேற்கு வங்காளம், கேரளா என 2 மாநிலங்களில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம் உள்ளது. இதுதவிர வேறு எந்த மாநிலத்திலும் அந்தக் கட்சிகள் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுகவின் தயவில்தான் இருக்கின்றன.
தவிர நடந்து முடிந்த மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் பலன் பூஜ்யமாகத்தான் இருந்தது.
இதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்தான் ஆதிக்கம் செலுத்த விரும்பும். அப்போது தங்களால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருதுகிறது.
அதேநேரம் மம்தாவுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் பாஜகவுக்கு சாதகமாகி விடும் என்றும் அது நினைக்கிறது. எனவே எதிர்க்கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர விரும்பும் பிரசாந்த் கிஷோரின் முயற்சி கம்யூனிஸ்டுகளை காலி செய்துவிடும் என்று சீதாராம் யெச்சூரி பயப்படுகிறார். அதுபோல கேரளாவில் தற்போது ஆட்சியில் இருப்பதால் 20 தொகுதிகளையும் கைப்பற்ற முடியும் என்று கம்யூனிஸ்டுகள் நம்புகின்றனர். ஆனால் பிரசாந்த் கிஷோர் வகுத்துத் தரும் திட்டத்தின்படி கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக்கொள்ளும் நிலை உருவாகும். இதையும் கம்யூனிஸ்டுகள் விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் 4 எம்பிக்கள் உள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் போட்டியிட தலா ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்படும் நிலை உருவாகலாம். இப்படி 3 மாநிலங்களிலும் கம்யூனிஸ்டுகளுக்கு இடியாப்பச் சிக்கல் உள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று விட்டால் ராகுலை பிரதமராக நியமிக்கலாம் என்றும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை துணை பிரதமராக அறிவிக்கலாம் என்றும் பிரசாந்த் கிஷோர் யோசனை கூறி இருக்கிறார், என்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறேன் என்று கூறி தங்களது கட்சிகளை பிரசாந்த் கிஷோர் ஒழித்துக் கட்டி விடுவாரோ என்று கணக்கு போட்டு மார்க்சிஸ்ட்டும், இந்திய கம்யூனிஸ்ட்டும் அச்சப்படுகின்றன. அந்த அலறல் எதிரொலிதான் சோனியாவுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் சீதாராம் யெச்சூரி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஷயத்தில் அறிவுரை வழங்கியிருப்பது.
இன்னொரு விஷயத்திலும் கம்யூனிஸ்டுகள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். ஐபேக் நிறுவனம், வர்த்தக ரீதியாக செயல்படுவதால் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் தாவுவதற்கோ, அல்லது தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் மந்தமாக செயல்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது என்றும் கருதுகின்றனர். அதனால்தான் அவர்கள் மம்தாவையும் நம்பவில்லை. பிரசாந்த் கிஷோரையும் ஏற்க மறுக்கின்றனர்” என்று அவர்கள் உண்மையை உடைத்தனர்.
மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுவதை காங்கிரஸ் காதில் போட்டுக் கொள்ளுமா என்று தெரியவில்லை!
0
0