30ம் தேதிக்குள் +2 மாணவர்களின் மதிப்பெண்கள் இணையத்தில் பதிவேற்றவும் : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

24 June 2021, 7:29 pm
Quick Share

சென்னை : பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்களை வரும் 30ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட உத்தரவிட்டது. மேலும், 10 நாட்களுக்குள் மதிப்பெண் கணக்கிடும் முறையையும் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்கள் 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து நாளை முதல் வருகிற 30ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றவேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்படும் மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் சமர்பிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சிபிஎஸ்இ +2 தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு முறை எப்படி என்பதை பொறுத்தே, மாநில அளவிலான +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிட செய்ய முடியும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 106

0

0