ஸ்டாலின்தான் பிரதமர்… திமுக எம்பியின் திடீர் ஆசை… மகிழ்ச்சியில் அறிவாலயம்… அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ்..!

Author: Babu Lakshmanan
21 February 2022, 2:55 pm
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வீழ்த்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இப்போதே வரிந்து கட்டிக்கொண்டு அது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் நடத்த தொடங்கி விட்டன.

முனைப்பு காட்டும் எதிர்கட்சிகள்

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் போட்டி களத்தில் குதிக்க வேண்டிய காங்கிரஸ் வெளிப்படையாக எதுவும் அறிவிப்பு வெளியிடாமல் அமைதி காக்கும் நிலையில் சோனியா, ராகுலை விட இந்த ஆர்வம் சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்
கட்சிகளிடம் மிகுதியாக காணப்படுகிறது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையில் போட்டியிட விரும்பவில்லை. அதேநேரம் தனது விருப்பத்திற்கேற்ப எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான காய்களை அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலே சாதுரியமாக நகர்த்தி வருகிறார்.

தேசிய அளவில் பாஜக அல்லாத மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர மம்தா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதனை கருத்தில்கொண்டே உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று அவர் பேசியும் இருக்கிறார். அதேபோல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆகியோருடன் கூட்டணி அமைப்பது குறித்து மம்தா போனில் தொடர்பு கொண்டு விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறல் பற்றி ஆலோசனை செய்வதற்காக ஸ்டாலின், சந்திரசேகர்ராவ், உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு மம்தா அழைப்பு விடுத்தும் இருக்கிறார்.

திமுக எம்பியின் ஆசை

இந்த நிலையில்தான் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது ஒரு அதிரடி தகவலை வெளியிட்டார். அது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் டெல்லி மேலிட காங்கிரசுக்கும் அதிர்ச்சி தரும் விஷயமாகும்.

இளங்கோவன் கூறுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். மக்களோடு மக்களாக கலந்தும் இருக்கிறார். இரண்டு பேர் கையை நீட்டினால், நிறுத்தி என்னவென்று கேட்கிறார். இவரைப்போன்ற முதலமைச்சர் தற்போது யாரும் இல்லை என தலைவர்கள் கூறுகின்றனர். 

நாங்கள் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் இதனை கேட்டுக் கொண்டிருக்கிறோம். 
ஸ்டாலினை போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத்தொடங்கிவிட்டனர்.

ஸ்டாலின் பிரதமராக வந்தால் இந்த நாடு செழிக்கும். மக்களின் விருப்பமும் அதுதான். ஸ்டாலின் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொடுத்து வருகிறார். அவர் பிரதமர் ஆக வேண்டும் என்று மக்களும் ஆசைப்படுகிறார்கள்” என்று அவர் தன் விருப்பத்தை பொது வெளியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஸ்டாலின் நிலைப்பாடு

இது குறித்து டெல்லியில் அரசியல் நோக்கர்கள், மூத்த செய்தியாளர்கள் கூறும்போது,
“மாநில கட்சிகள் ஒன்று கூடி கூட்டணி அமைத்தால் அவர்கள் யாரை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்வார்கள் என்ற மிகப் பெரிய கேள்வி எழுகிறது. பெரும்பாலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மாநில கட்சிகள் முன்னிறுத்தும்
என்று எதிர்பார்க்கலாம். அவருக்கும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆசை இருப்பது தெரிகிறது.

இன்னொரு பக்கம் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தங்களுக்கு இணக்கமான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை, வெளிப்படையாக அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் ஸ்டாலின் பிரதமராக ஆக வேண்டும் என்று எம்பி டிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக கூறி இருக்கிறார். இந்த திட்டத்தில் மம்தா தீவிரமாக உள்ள நிலையில் ஸ்டாலினை பிரதமராக்க வேண்டும் என்று திமுக எம்பி கூறியிருப்பது மம்தாவை மட்டுமின்றி, சோனியாவையும், ராகுலையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராகுல் காந்தி வருகை

மேலும் தான் எழுதியிருக்கும் ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை இம்மாதம் 28-ம் தேதி சென்னையில் வெளியிட இருப்பதாக ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் கலந்துகொள்வார் என்கிறார்கள். மம்தா, பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சந்திரசேகர ராவ் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக “உங்களில் ஒருவன்” நூல் வெளியீட்டு விழா அமையலாம்.

rahul_gandhi_updatenews360

அதேநேரம் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் அழைப்பை ஏற்று, திடீரென நேற்று மும்பை சென்ற தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சந்திரசேகரராவ் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக, போட்டியிட முயற்சிக்கிறாரா?… அல்லது ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைய விரும்பி அவர் தேசிய தலைவர்களை சந்திக்கிறாரா?… என்று பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.

திமுகவின் பிளான்

பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவராக ஸ்டாலின் இருப்பார் என்று திமுக எம்பி இளங்கோவன் மறைமுகமாக குறிப்பிடுகிறார். அப்படியென்றால் 2024 தேர்தல் கூட்டணியில் இருந்து காங்கிரசை திமுக கழற்றி விடுமா?… என்ற கேள்வியும் எழுகிறது.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் வடமாநிலங்களில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதில் மொழிச் சிக்கல் எழவும் வாய்ப்பு உண்டு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எந்த அளவுக்கு காங்கிரஸ் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து திமுக தலைமை, பிரதமர் வேட்பாளர் பற்றிய இறுதி முடிவை எடுக்கலாம்.

அதேநேரம் தங்களது கூட்டணியில் காங்கிரஸ் இல்லையென்றால் திமுகவால் பெரும்பான்மையான நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.

2024 தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 32க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட திமுக விரும்புவதாக தெரிகிறது. அப்போதுதான் மத்தியில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைந்தால், தங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் என்று திமுக நினைக்கிறது.

அதனால்தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி என்கிற முறையில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்பதற்காக திமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் அவ்வப்போது ஸ்டாலின் பிரதமராக வேண்டும் பேசி வருகிறார்களோ என்றும் கருதத் தோன்றுகிறது” என தங்களின் கணிப்பை அந்த அரசியல் நோக்கர்கள், மூத்த செய்தியாளர்கள் போட்டு உடைத்தனர்.

Views: - 719

0

0