அதிகரிக்கும் கொரோனா : மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை: மத்திய அரசிற்கு தமிழகம் துணை நிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

Author: Udhayakumar Raman
13 January 2022, 9:00 pm
Quick Share

சென்னை: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழகம் துணை நிற்கும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 3-வது அலை காரணமாக தினசரி பாதிப்பு அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 1.5 லட்சத்துக்கு மேல் இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்தை தாண்டியது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தொட்டுள்ளது.இந்தநிலையில் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட தடுப்பூசிகள் சிறந்த தீர்வு. நம் நாடு உட்பட பல நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. இந்த மாறுபாட்டை எதிர்த்துப் போராடும் வேளையில், அடுத்த நெருக்கடிக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கோவிட்க்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. நாட்டில் தொண்ணூற்று இரண்டு சதவீத வயது வந்தோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதையடுத்து கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியபோது, கொரோனா தொற்றுநோயின் ஒமிக்ரான் அலையை நிர்வகிக்க தமிழகம் முழுமையாக தயார் நிலையில் உள்ளளதாகவும், தமது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளதாகவும், அந்த வகையில் இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாகவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழகம் துணை நிற்கும் என்று உறுதியளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Views: - 101

0

0