திமுக மீது சாட்டையை சுழற்றிய பிரதமர் மோடி : கதி கலங்கிய ஸ்டாலின்!!

27 February 2021, 1:02 pm
BJP - DMK - updatenews360
Quick Share

பிரதமர் மோடி இந்த மாதத்தில், இரு முறை தமிழகத்திற்கு, வந்துள்ளார். அவருடைய இந்தப் பயணத்திற்கு பின், தமிழக அரசியல் களம் முன்பை விட ‘டாப் கியரில்’ செல்லத் தொடங்கி இருக்கிறது. கடந்த14-ம் தேதி அவர் சென்னை வந்தபோது 8,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் கைகோர்த்து உயர்த்தி காண்பித்தும் அசத்தினார். அந்தக் காட்சி உங்கள் இருவர் தலைமைக்குத்தான் எனது முழு ஆதரவு என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

மோடியின் வெளிப்படையான இந்த செய்கை பாஜகவின் மனப்பூர்வமான ஆதரவு என்பதையும் குறிக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இப்படி ஆதரவுக்கரம் நீட்டுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவருக்கு உடனடியாக சுர்ரென்று கோபம் வந்தது. அது எவ்வளவு உச்சத்துக்கு சென்றது என்பதை ஸ்டாலின் ஆவேசத்துடன் உதிர்த்த வார்த்தைகளை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.

“எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் கரங்களை உயர்த்தி பிடித்ததன் மூலம் அவர்களது ஊழலுக்கும் மோடி துணை போகிறார்” என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகப்படுத்தினார்.

திமுக இப்படி நேரடியாக பிரதமர் மீது குற்றம்சாட்டி பேசியதை பாஜக அவ்வளவாக ரசிக்கவில்லை. இதற்கு தக்க பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தது. அதுவும் பிரதமர் மூலமே அதை நிறைவேற்ற பாஜக விரும்பியது. அதன் எதிரொலிதான் கோவையில் திமுக மீது மோடி
சாட்டையை சுழற்றியது.

“வணக்கம் தமிழ்நாடு. வணக்கம் கோயம்புத்தூர். வெற்றிவேல் வீரவேல்” என்று உரையை தமிழில் ஆற்றத் தொடங்கிய பிரதமர் மோடி ,” திமுக தனது தனித் தன்மையை எப்போதோ இழந்து விட்டது. ஊழல் செய்வதற்காகவே திமுக தன் மூளையை பயன்படுத்துகிறது. தங்களின் சட்டைப்பையை நிரப்பிக் கொள்ளவே திமுகவும், காங்கிரசும் நினைக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் மாவட்டம்தோறும் சமூக விரோதிகளை உருவாக்கி மக்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணியால் நல்லாட்சியை கொடுக்க முடியாது” என்று நாலு வரிகளில் நறுக்கென்று கொட்டினார்.

Modi - updatenews360

இது பற்றி அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “பிரதமரின் இந்த இரட்டை தாக்குதல் ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த தகுதியும் கிடையாது, என்பதைத்தான் அப்பட்டமாக சொல்கிறது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடந்த நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, தினமும் 18 நேர மின்வெட்டு போன்றவற்றை தமிழக மக்களுக்கு பிரதமர் நினைவூட்டி இருக்கிறார்” என்றனர்.

இதேபோல் புதுச்சேரி பிரசாரத்தில் காங்கிரசையும் மோடி ஒரு பிடி பிடித்தார். அவருடைய பேச்சில் வழக்கமான கேலிகளும், கிண்டல்களும் நிறைந்திருந்தது. அண்மையில் புதுவைக்கு வந்த ராகுல் காந்தியிடம், மீனவப் பெண் ஒருவர் நாராயணசாமி மீது கூறிய புகாரை, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நாராயணசாமி தவறாக ராகுல் காந்தியிடம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையும் பிரதமர் மோடி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அவர் பேசும்போது “காங்கிரஸ்காரர்கள் பொய் சொல்வதில் எல்லா பதக்கங்களையும் வாங்கி குவித்தவர்கள். மீனவப் பெண் ஒருவர் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர்தான் இந்த நாராயணசாமி. காஷ்மீரில் கூட உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

ஆனால் நாராயணசாமி இங்கே முதல்வராக இருந்த காலத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவே இல்லை. தற்போது காங்கிரசின் பிடியிலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்று இருக்கிறது. நாடு முழுவதும் பரம்பரை அரசியல் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று காட்டமாகவே காங்கிரசை அவர் சாடினார்.

Stalin - Updatenews360

மோடியின், இந்த இரட்டை தாக்குதல் குறித்து டெல்லி பத்திரிகையாளர்கள் கூறும்போது “பிரதமர் தாக்கிப் பேசுகிறார் என்றால், அது எப்போதும் அமித்ஷாவின் குரலாகத்தான் இருக்கும். அதனால் தமிழகத்தில் பாஜக தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது என்றே தோன்றுகிறது. திமுக மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் தேர்தல் நடப்பதற்குள் தீர்ப்புகள் வந்துவிடும். ஏற்கனவே திமுகவை ஆதரித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்விட் செய்ததில் மோடியும், அமித்ஷாவும் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும் அண்மையில் வெளி நாடுகளில் இருந்து முறை கேடாக நிதி திரட்டிய ஒரு முக்கிய பிரமுகரிடமிருந்து, திமுக பல கோடி ரூபாய்களை தேர்தல் நிதியாக பெற்றிருப்பதாக கூறப்படும் விஷயமும் பாஜகவின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையெல்லாம் பாஜக இனி கையில் எடுக்கும். தமிழக பாஜக பிரதமருக்கு நினைவுப் பரிசாக வேல் ஒன்றை வழங்கியதே இதற்கு சாட்சி” என்று குறிப்பிட்டனர்.

ஆக, தமிழகத்தில் பிரதமர் காட்டிய அதிரடி மூலம் பாஜக தன் தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. அதனால் அரசியல் களத்தில் இனி பரபரப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்பது நிச்சயம்!

Views: - 40

0

0