புதிய அமைச்சரவையில் பெண்கள், சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் : அதிரடி காட்டும் பிரதமர் மோடி!!

7 July 2021, 2:06 pm
cabinet updatenews360
Quick Share

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், பெண்கள், சிறுபான்மையினர் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் விலகல் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவால், அமைச்சர் பதவிகள் காலியாகின. இருப்பினும், அந்தப் பதவிகளை அமைச்சர்கள் கூடுதல் பொறுப்பாகவே வகித்து வந்தனர்.

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தாவர்சந்த் கெலாட், சந்தோஷ் கங்வார் ஆகியோர் ராஜினாமா செய்ததால், அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் காலியாகின. இதனால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிக வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக துணை தலைவர் சோபா கராண்ட்லஜே, பிரீத்தம் முண்டே, ஹீனா கவித் ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அதேவேளையில், எஸ்சி பிரிவிலிருந்து 12 பேரும், எஸ்டி பிரிவிலிருந்து 8 பேரும் ஓபிசி பிரிவிலிருந்து 27 பேருக்கும் வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இஸ்லாமிய, சீக்கியர், கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த தலா ஒருவருக்கும், புத்த மதத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 121

0

0