பொய் சொல்வதில் பதக்கங்களை பெற்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர் : பிரதமர் மோடி கடும் தாக்கு
25 February 2021, 1:23 pmபுதுச்சேரி : பொய் சொல்வதில் அனைத்துவிதமான பதக்கங்களையும் பெற்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று புதுச்சேரியில் பேசிய பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- புதுச்சேரியில் புதிய மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சாலை, சுகாதாரம், விளையாட்டு, கடல்சார் பொருளாதார திட்டங்கள் புதுச்சேரியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது. புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு ஜனநாயக விரோத அரசு. புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை.
புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளின் போது காங்கிரஸ் அரசு பாராமுகமாக இருந்தது. புயல் பாதிப்பு குறித்த பெண்ணின் முறையீட்டை, தன் கட்சியின் தலைவரிடம் தவறாக மொழி பெயர்த்து பொய் கூறினார் நாராயணசாமி.காங்கிரஸ் அரசின் ஜனநாயக விரோதப் போக்கு காரணமாக புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படவில்லை. காங்கிரஸ் பிரிவினைவாத அரசியலை செய்கிறது. பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். பொய் சொல்வதில் அனைத்து பதக்கங்களையும் பெற்றவர்கள் காங்கிரஸ்காரர்கள்.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய பொய்யர்களை பொதுமக்களால் எப்படி நம்ப முடியும்..? புதுச்சேரி வந்த ராகுல்காந்தி, மீன்வளத்திற்கு தனி அமைச்சகம் இல்லை என பொய் கூறியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே மீன்வளத்துறை அமைச்சகத்தை ஏற்படுத்தி செயலாற்றி வருகிறது.
தற்சார்பு இந்தியா இயக்கத்தில் புதுச்சேரிக்கு முக்கிய பங்கு உள்ளது. மத்திய அரசு அளித்த நிதியை புதுச்சேரி காங்கிரஸ் அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை. புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்யாத காங்கிரஸ் அரசு, டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு சேவை செய்து கொண்டிருந்தது.
2016ம் ஆண்டில் வாக்களித்த புதுச்சேரி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றி விட்டது. காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தில் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதில் நம்பிக்கை இல்லாத கட்சி காங்கிரஸ். புதுச்சேரியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கமாக இருக்கும், எனக் கூறினார்.
0
0