வருத்தம்தான்… ஆனால் நம்பிக்கை இருக்கு… இனி எல்லாம் தமிழக அரசின் கையில்தான்… அன்புமணி ராமதாஸ் பேட்டி…!!

Author: Babu Lakshmanan
1 April 2022, 7:17 pm
Quick Share

சென்னை : கூடுதல் தரவுகளை இணைத்து தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது பேசிய அவர்,காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பல்வேறு ஆபத்துக்களை உருவாகி வருவதாகவும், அதனுடைய பாதிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் பெரும் தீங்காக அமையும். எனவே மாணவர்கள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பெற வேண்டியது அவசியம், என வலியுறுத்தி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நேற்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. இருந்தபோதிலும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருந்த 7 கேள்விகளில் ஆறு கேள்விகள் தவறானவை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எனவே தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மீண்டும் சட்டமியற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது.

மற்றவர்கள் சொல்வது போல அதிமுக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு சட்டம் அவசரகதியில் கொண்டுவரப் பட்டது அல்ல நீண்டகால கோரிக்கைக்கு பின்பு முறையான கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் டோல்கேட் இருக்கக்கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே திமுக பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிடுவதை திமுக தலைவர் ஸ்டாலின் தடுக்க வேண்டும்.

சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக அனைவருக்கும் இலவசம் என அறிவிக்க வேண்டும். அதற்கு ஏற்ப தரமான 8000  பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Views: - 864

0

0