கலங்காதே மகனே… கண்டிப்பாக நீதி பெற்று தருவேன் : திமுக எம்பி ஆலையில் மர்ம சாவு… நம்பிக்கை கொடுத்த ராமதாஸ்..!!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 1:00 pm
Quick Share

சென்னை : கடலூரில் திமுக எம்பிக்கு சொந்தமான ஆலை ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தினமும் காலை 8 மணிக்கு பணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் கோவிந்தராசு நேற்றிரவு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னையில் பணியாற்றும் அவரது மகன் செந்தில் வேல் என்பவரை, கோவிந்தராசுவின் செல்போனில் இருந்து எம்.பி.ரமேஷின் உதவியாளர் தொடர்பு ‘உனது தந்தை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்..உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கோவிந்தராசுவின் குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, அவரது உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் இருந்துள்ளது. மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டவரின் கண்ணிலும், உடலிலும் எப்படி ரத்த காயங்கள் ஏற்படும் என உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், இரவு 8 மணிக்கு வீடு திரும்ப வேண்டியவர், இறந்துவிட்டதாக அதிகாலை 2 மணிக்கு சொல்ல வேண்டிய நோக்கம் என்ன என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இது குறித்து முந்திரி ஆலையில் பணியாற்றும் சிலரிடம் விசாரித்த போது மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. இரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து, கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக, காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.வி.ஆர் ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவிந்தராசுவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென உறவினர் கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடலூரில் திமுக எம்பிக்கு சொந்தமான ஆலை ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தராமல் நான் ஓய மாட்டேன். கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் கலங்க வேண்டாம். கொடியவர்களின் தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அஞ்ச வேண்டாம்; பணிய வேண்டாம். கடலூர் எம்.பி முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேலிடம் தொலைபேசியில் பேசினேன்.உனக்கு கண்டிப்பாக நீதி பெற்று தருவேன்… கலங்காதே என உறுதியளித்தேன். இந்த விஷயத்தில் அய்யாவைத் தான் நம்பியிருக்கிறேன் என்றார் அந்த தம்பி அழுதபடியே. அவரது நம்பிக்கை வீண் போகாது!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 206

0

0