அன்புமணிக்குத் துணைமுதல்வர் பதவி பெறவே வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் : ஆட்சியில் பங்கு நெருக்கடிக்கு பணியாத அதிமுக!!

26 October 2020, 5:14 pm
ramadass-and-anbumani - updatenews360
Quick Share

சென்னை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி பேரத்துக்கு முன் தனது வலிமையை அதிகமாகக் காட்டிக்கொள்வதற்கே பாமக தலைவர் ச.ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தை அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவும், திமுகவும் பாமகவின் ஆட்சியில் பங்கு, அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி போன்ற நிபந்தனைகளை ஏற்க வாய்ப்பில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 1987-ஆம் நடைபெற்ற போராட்டத்தைப்போல் இந்தப் போராட்டம் அமையும் என்றும், வரலாறு காணாத வகையில் அமையும் என்றும், போராட்டத்தின் போதே,’போராட்டத்தைக் கைவிட்டு வாருங்கள். வன்னியர்கள் தனி இடஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்” என்று அரசு நமக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் கடுமையாக அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ramadoss updatenews360

1987-ஆம் ஆண்டு பாமக நடத்திய போராட்டத்தில் வட மாவட்டங்களில் பல இடங்களில் முக்கிய சாலைகள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்களால் மறிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகினர். அதே போன்ற சாலை மறியல் போராட்டம் ஜனவரியில் நடைபெற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்படும். கொரோனா ஊரடங்குக்குப் பின் இப்போதுதான் தமிழகம் வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்பிவருகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் ஒரு கடுமையான போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும்.

சாதி மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தை நடத்த ராமதாஸ் நினைப்பதற்குக் காரணம் தேர்தலுக்கு முன் தனது பலத்தைக்காட்டுவதற்காகவே என்று கூறப்படுகிறது. ”தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது பாமகவின் 40 ஆண்டு கால கோரிக்கை என்று அவரே கூறும் நிலையில், தேர்தல் நெருக்கத்தில் திடீரென்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது.

Anbumani 02 updatenews360

“தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை”, என்று ராமதாஸ் சொன்னாலும், இதுவரை இரண்டு கட்சிகளுடன் அவர் கூட்டணி சேர்ந்தபோது வன்னியர் இட ஒதுக்கீட்டை அவர் கூட்டணிக்கான நிபந்தனையாக வைக்கவில்லை. மத்திய ஆட்சியில் பங்கு வகித்து அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோதும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ராமதாஸ் வாய் திறந்ததில்லை.

1987-ஆம் ஆண்டு பாமக நடத்திய வன்னியர் இட ஒதுக்கீடுப் போராட்டமே அந்தக் கட்சிக்கு பெருமளவு வன்னிய மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. முதலில் பாமக தேர்தலைப் புறக்கணித்தது. பின்பு 1991 சட்டமன்றத் தேர்தலிலும் 1996 தேர்தலிலும் வன்னியர் கட்சி என்பதை முன்வைத்தே பாமக தேர்தலை சந்தித்தது. 1991-ல் ஒரு இடத்திலும், 1996-ல் நாலு இடங்களிலும் மட்டுமே பாமகவால் வெற்றிபெற முடிந்தது. அதன்பிறகு 1998 நாடாளுமன்றத் தேர்தல் முதல் அது கூட்டணி அரசியலில் இறங்கியது. அப்போது அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என்பதால் வன்னியர் முத்திரையை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், தொடர்ந்து எம்.எல்.ஏ சீட்களுக்கும், அன்புமணி ராமதாஸ் எம்.பி, ஆவதற்கும் மத்திய அமைச்சராவதற்கும் பாமக முக்கியத்துவம் அளித்ததால் வன்னியர்களிடம் பாமக செல்வாக்கு இழந்தது. தற்போது நாடாளுமன்ற மக்களைவையிலும், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் அந்தக் கட்சிக்கு ஒரு இடமும் இல்லை. கட்சியின் தேர்தல் அங்கீகாரத்தையும் பாமக இழந்துவிட்டது.

இந்நிலையில் 2021 தேர்தலில் மாநில ஆட்சியில் பங்கு கேட்போம் என்று பாமகவின் மூத்த தலைவர் தீரன் தெரிவித்துள்ளார். அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி தரவும் கோருவோம் என்றும் அவர் கூறினார். மேலும், யாருடன் கூட்டணி வைத்தாலும் குறைந்தது 80 இடங்களைப் பெறுவோம் என்றும் பாமக தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

ஆனால், இதுவரை பாமகவுடன் கூட்டணியை அதிமுக உறுதி செய்யவில்லை. திமுக பொதுச்செயலாளர் க. துரைமுருகன் மூலமாக திமுகவுடன் கூட்டணி பேசியும் எதுவும் நடக்கவில்லை. புதிதாகக் கூட்டணியில் எந்தக் கட்சிக்கும் இடம் இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பாமகவுக்கு கதவைச் சாத்திவிட்டார். இரு திராவிடக்கட்சிகளும் பாமகவின் பேரத்தைக் கண்டுகொள்ளவில்லை என்பதால் தனது பலத்தைக் காட்ட இட ஒதுக்கீடுப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

pmk-aiadmk-alliance- updatenews360

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. இரு கட்சிகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக கொடுத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்ததால் வட மாவட்டங்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பாமகவின் ஆதரவு இருந்தால்தான் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற சூழல் இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் அப்படி எந்த நெருக்கடியும் அதிமுகவுக்கு இல்லை. ஏற்கனவே, திமுகவும் பாமகவுக்குக் கதவைச் சாத்திய நிலையில் அதிமுகவை விட்டால் பாமகவுக்கு வேறு வழியில்லை. இந்த நிலையில் பாமகவின் அதிகப்படியான பேரத்துக்கு அதிமுக பணியாது என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

Views: - 20

0

0