தினகரன் வெளியே; சீமான் உள்ளே… மாற்று சக்தியாக உருவெடுக்கிறதா நாம் தமிழர் கட்சி?

12 April 2021, 9:02 pm
Dinakaran - seeman - updatenews360
Quick Share

2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அனல் பறக்கும் விதமாகவும் ஆவேசமாகவும் பேசிய கட்சியின் தலைவர் என்று எடுத்துக் கொண்டால் அதில் முதலிடம் பிடிப்பவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று சொல்லலாம்.

அவரை விட மற்ற கட்சிகளில் யாரும் இப்படி பேசவில்லையா? என்ற கேள்வி எழலாம்.
ஆனால் கட்சியின் தலைவர் என்கிற முறையில் வேடிக்கையாக, வினோதமாக, நகைச்சுவையாக, சிந்தனையை தூண்டும் விதமாக, ஆவேசமாக என்று பல்வேறு கோணங்களில் பார்த்தால் சீமான் மற்ற தலைவர்களை விட ஒரு படி முன்னே இருப்பது தெரியும்.

மேலும், பிரதான கட்சிகளின் தலைவர்களில் பலர் சீமானை விட பேச்சாற்றல் மிக்கவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் தங்கள் கட்சியின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் அனுசரித்துப் பேச வேண்டிய கட்டாயம் இருக்கும். அது போன்றதொரு நிர்ப்பந்தம் சீமானுக்கு இல்லையென்றே சொல்ல வேண்டும். அதனால்தான் விருப்பப்பட்ட படியெல்லாம் அவர் உணர்ச்சி பொங்க பேசுகிறார்.

Seeman_EPS - upddatenews360

இன்னொரு விஷயத்தையும் இங்கே கவனிக்க வேண்டும். சீமான் ஒருவர் மட்டுமே அவருடைய கட்சிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். மற்ற கட்சிகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவரவர் கட்சிக்கு தமிழகம் முழுவதும் வலம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

50 பேர் கூடிய இடத்தில்கூட சீமான் அரைமணிநேரம் பேசி தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்தத் தேர்தலில் அவர் வேட்பாளர்களை நிறுத்திய அணுகுமுறை அரசியல் விமர்சகர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது.

அதாவது பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார். வேறு எந்த ஒரு கட்சியும் இந்திய தேர்தல் வரலாற்றில் இத்தனை பெண்களை நிறுத்தி இருக்குமா? என்பது சந்தேகம்தான். அதேபோல் படித்தவர்களையும், இளைஞர்களையும் தேர்தல் களத்தில் அவர் அதிகமாக இறக்கி விட்டிருந்தார்.

அதற்கு ஓரளவு பலன் கிடைத்ததையும் தேர்தல் நாளன்று கண்கூடாக காண முடிந்தது. தமிழகம் முழுவதும் அன்று அதிமுக- திமுக கூட்டணி கட்சிகளுக்கு இணையாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் வாக்குச்சாவடியில் முகவர்களாக இடம் பிடித்திருந்தனர்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக கட்சிகளுக்கு கூட பரவலாக வாக்குச்சாவடிகளில் இந்த அளவிற்கு முகவர்கள் இல்லை என்பது உண்மை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 4 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தது. இது ஒரு சதவீத ஓட்டு ஆகும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் கட்சி திடீர் விஸ்வரூபம் எடுத்து 16 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது. இது 4 சதவீத வாக்கு.

இந்தத் தேர்தலில் அக்கட்சி குறைந்த பட்சம் 30 லட்சம் வாக்குகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு நாம் தமிழர் கட்சியில் மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களிடமும் பரவலாக எழுந்துள்ளது. இதைவிட கூடுதலாக கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. சீமானின் பேச்சாற்றல் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போலவே உள்ளது என்று பலர் கருதுகின்றனர்.

இதனால் கருணாநிதியின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்ட தமிழ் ஆர்வலர்கள் இந்த தேர்தலில் அவர் உயிருடன் இல்லாத நிலையில் சீமான் பக்கம் சாய்ந்திருக்கவும் வாய்ப்புண்டு.

அடுத்ததாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சீமான் காட்டும் வேகம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

இதனால் மதிமுக தொண்டர்களின் வாக்குகளையும் அவர் கணிசமாக இழுக்க வாய்ப்பு உண்டு. அதாவது மதிமுக போட்டியிடாத தொகுதிகளில் சீமானுக்கு மதிமுக தொண்டர்களின் வாக்குகள் ஓரளவு கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மூன்றாவதாக, முதல்முறை வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்து இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஏனென்றால் சீமானின் பிரச்சாரம் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதை விட சமூக ஊடகங்களில் பெருமளவு காணப்பட்டது.

இந்த பிரசாரம் இளம் வாக்காளர்களை, குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகளை ஈர்த்து இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். எனவே, அவர்கள் புதிதாக ஒருவருக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

ஏன் நடிகர் கமல்ஹாசன் மாற்று சக்தியாக தெரியவில்லையா? டிடிவி தினகரன் அவருக்கு முன்பாகவே அரசியலில் இருப்பவர்தானே? என்று கேள்விகள் எழலாம்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “இந்த மூன்று தலைவர்கள் இடையேயும் ஒரு பெரிய வித்தியாசத்தை காண முடியும். கமல்ஹாசனும், டிடிவி தினகரனும் சீமானை விட பிரபலமானவர்களாக இருக்கலாம். மக்கள் அறிந்த முகங்கள் ஆகவும் தெரியலாம். ஆனால் இந்த மூவரில் சீமான் தான் தேர்தல் விஷயத்தில் முந்திக் கொண்டவர்.

டிடிவி தினகரன் முன்பு அதிமுகவில் இருந்தவர். 2017-ல் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்தான், அவர் தனிப்பட்ட முறையில் அரசியலுக்குள் வந்தார். அதன் பிறகுதான் அமமுகவையும் தொடங்கினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய கட்சிக்கு 22 லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது.

நடிகர் கமல்ஹாசனை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தான் முதன் முதலாக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் 15 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளையும் அவருடைய கட்சி பெற்றது.

ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பாகவே 2016 தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி களம் இறங்கி விட்டது. இந்த விதத்தில், பார்த்தால் கமல்ஹாசனையும், டிடிவி தினகரனையும் விட சீமான்தான் சீனியர் என்பது வெளிப்படை. இதை, கடந்த தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தவர்களும், இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஓட்டுப் போட்ட முதல்முறை வாக்காளர்களும் நன்றாகவே அறிவார்கள்.

TTV dinakaran 01 updatenews360

மேலும் மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சீமான் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் கண்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அக்கட்சி தொடர்ச்சியாக சந்தித்த மூன்றாவது தேர்தல் இதுவாகும்.

இதுவும் இளம் வாக்காளர்களை கவர்ந்த ஒரு அம்சம். இதனால் இவர்களில் பெரும்பாலானோரின் முதல் விருப்பம் நாம் தமிழர் கட்சியாகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பல்வேறு ஊடகங்களின் கணிப்புப்படி இளைய தலைமுறையினரின் கணிசமான ஓட்டுகள் சீமான் கேட்காமலேயே அவருடைய கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்துள்ளது. இதற்கு அடுத்தாற்போல் புதியவர்களின் ஓரளவு வாக்குகள் மக்கள் நீதி மய்யத்திற்கு சென்றுள்ளது.

இதற்கடுத்த நிலையில்தான் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் முதல் முறை வாக்காளர்களின் ஓட்டுகள் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு இளைஞர்களின் வாக்குகள் 5-வது வாய்ப்பாகத்தான் விழுந்திருக்கும்.

எனவே, சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது. அக் கட்சிக்கு அதிகபட்சம் 7 சதவீத ஓட்டு கிடைக்கலாம். கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகரப்புறங்களிலும் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

இது தேர்தல் முடிவுகளிலும் அப்படியே எதிரொலித்தால் அமமுக அமுங்கி விடும். இதன் மூலம் மூன்றாவது அணிகளில் முதலிடம் பிடிக்கலாம் என்று கருதப்படும் நாம் தமிழர் கட்சி, தமிழகத்தில் மாற்று சக்தியாக எதிர்காலத்தில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்பானது ஒன்றுதான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

இப்படி நாம் தமிழர் கட்சிக்கு முதல்முறை வாக்காளர்களின் ஓட்டுகள் அதிகம் கிடைத்திருக்கலாம் என்ற தகவல் திமுகவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தேர்தலில் நேரடி போட்டி நடந்திருந்தால் இந்த ஓட்டுகளில் பெருமளவு திமுகவுக்கு கிடைத்து வெற்றி வாய்ப்பு அதிமாகி இருக்கும். ஆனால் 5 முனை போட்டியால் இந்த வாக்குகள் முழுமையாக தங்களுக்கு வராமல் போய் வெற்றி வாய்ப்பும் கேள்விக்குறியாகி விட்டதே என்ற வருத்தம்தான், இதற்கு முக்கிய காரணம்.

Views: - 78

2

0