புதுவையில் திமுக – காங்.,’டிஷ்யூம் டிஷ்யூம்’ ஏன்?… திகைக்க வைக்கும் பின்னணி!!

20 January 2021, 5:24 pm
pondy dmk - cong - updatenews360
Quick Share

இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் புதுச்சேரியில் போட்ட அரசியல் வெடிகுண்டின் அதிர்வுகள் இன்னும் நீங்கிய பாடில்லை. இதனால், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்டம் கண்டு போயிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

இது தமிழகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்னும் இரு தினங்களில் மேற்கொள்ள இருக்கும் தமிழக சுற்றுப் பயணத்தின்போது தெரிந்துவிடும்.

ஆனால் அதற்கு முன்பாகவே திமுக தனது நிலைப்பாட்டை உறுதியாக அறிவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 21-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்திலேயே தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துகொள்வதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்யப்பட்டு, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rahul_Gandhi_UpdateNews360

புதுவையில் கொடுத்த திடீர் ஷாக் காரணமாக, திமுக மீது ராகுல்காந்தி செம கடுப்பில் இருப்பதாகவும், அதனால் அவர் கூட்டணி முறிவை அறிவிக்கும் முன்பாகவே திமுக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விடும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

புதுச்சேரியில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த இரு கட்சிகளுக்கும் இடையே எப்படி திடீர் மோதல் ஏற்பட்டது?… என்பது எல்லோருக்கும் புரியாத புதிராகத்தான் இருந்தது. ஆனால், இப்போதுதான் இதற்கான பின்னணி காரணங்கள் மெல்ல மெல்ல வெளியே கசியத் தொடங்கி இருக்கிறது.

காங்கிரசுடன் சுமூகமான உறவு இருப்பது போல திமுக காட்டிக்கொண்டாலும், அதன் மனதில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வித கோபம் நெருப்பு போல கனன்று கொண்டே இருந்து வந்துள்ளது. அதுவும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தக் கோபம் விசுவரூபம் எடுத்துள்ளது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 4.5 லட்சம் ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி கண்டார். அதன் பிறகு முதல்வர் நாராயணசாமியின் போக்கில் நிறையவே மாற்றங்கள் தென்படத் தொடங்கின. காங்கிரசின் இந்த அபார வெற்றிக்கு தனது திறமையான தலைமை தான் காரணம் என்று முதல்வர் நாராயணசாமி நினைக்கத் தொடங்கினார். இதனால் அவருடைய கர்வம் அதிகமாகி விட்டது என்கிறார்கள், புதுச்சேரி திமுகவினர்.

தங்களது ஆதரவுடன் தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு நாராயணசாமி, மாநிலம் தொடர்பாக திமுக வைக்கும் கோரிக்கைகளை புறக்கணித்தும் வந்துள்ளார்.

அதுபோல மாநில அரசின் திட்டம் சார்ந்துள்ள சில பதவிகளுக்கு திமுகவினர் ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எந்த நேரமும் கவர்னர் கிரண்பெடியுடன் சண்டை போடுவதிலேயே முதல்வர் நாராயணசாமி காலத்தை கடத்தி வந்துள்ளார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் நெருங்கி வருவதால் திமுகவினருடன் மீண்டும் அவர் நெருக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.
கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது நாராயணசாமிக்கு தெரியும். அதனால் அவர் மறுபடியும் திமுகவை நோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கினார்.

அப்போதுதான் திமுகவினர் விழித்துக்கொண்டு நாராயணசாமிக்கு கிடுக்குப்பிடி போட ஆரம்பித்தனர். அரசு நடத்தும் எந்த விழாக்களிலும், கவர்னருக்கு எதிராக நடத்தும் போராட்டங்களிலும் பங்கேற்காமல் அவர்கள் புறக்கணித்தனர். இது ஒரு முக்கிய காரணம் என்றால், அதைவிட இன்னொரு பெரிய காரணம் அண்மையில் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடந்த புதுவை திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரியவந்தது. அதுதான் திமுக எடுத்த தடாலடி முடிவுக்கு காரணம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

dmk pondy - updatenews360

இந்தக் கூட்டத்தில் பேசிய புதுவை மாநில திமுக நிர்வாகிகள் சிவக்குமார், சிவா எம்எல்ஏ இருவரின் மனதில் இருப்பது அப்படியே வெளிப்பட்டது.

”2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசார் திட்டமிட்டு பல தொகுதிகளில் திமுகவினரை தோற்கடித்து விட்டனர். திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் பல சுயேச்சைகளை மறைமுகமாக களமிறக்கியது. இதனால்தான் திமுக மூன்று இடங்களில் மட்டுமே ஜெயித்தது,” என்று தங்கள் மனக் குமுறலை கொட்டினர்.
இதை இவர்கள் இருவரும் ஏற்கனவே திமுக தலைமைக்கு ஆதாரப் பூர்வமாக கொண்டு சென்றும் இருந்தனர்.

இப்படி இவர்கள் சுட்டிக் காட்டுவதற்கு சில காரணங்களும் உண்டு.
புதுச்சேரியில் 1996க்கு முன்பு 3 முறை திமுக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. 2006 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த திமுக அப்போது 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 7 இடங்களில் ஜெயித்து இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டு நம்மை கவிழ்த்து விட்டார்கள் என்றும் திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இவர்கள் குறிப்பிட்டமாதிரி, திமுக தான் போட்டியிட்ட 9 இடங்களில் மூன்றில் மட்டுமே வெற்றி கண்டது. அதாவது மூன்று தொகுதிகளுக்கு ஒரு தொகுதி என்கிற விகிதத்தில் தான் திமுக வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் காங்கிரசின் வெற்றி விகிதமோ இதைவிட பன்மடங்கு இருந்துள்ளது. அதனால்தான் காங்கிரஸ் தங்களை திட்டமிட்டு தோற்கடித்து விட்டது என்று திமுக உறுதியாக நம்புகிறது.

புதுவையில் திமுகவை வளர விடாமல் தடுப்பதற்கு இதுபோல் செய்தார்கள் என்பதும் அந்த மாநில திமுக நிர்வாகிகள் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ஜெகத்ரட்சகன் கொதித்துப் போய் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி திமுகவை வெற்றி பெற வைப்பேன் என்று சபதம் போட்டது என்கிறார்கள்.

அதே நேரம், புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பு வாதங்களை கேட்டால் அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதுபோல் தான் தெரிகிறது.

DMK_MP_Jegathratchagan_UpdateNews360

புதுவையில் இதுவரை 13 முறை சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துள்ளது. அதில் காங்கிரஸ் மட்டும் 6 முறை ஜெயித்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ரெங்கசாமி கூட ஒரு முறை ஆட்சியை கைப்பற்றி விட்டார். ஆனால் திமுக 3 முறைதான் ஆட்சியை பிடித்து உள்ளது. அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு. எனவே தற்கால அரசியல் போக்குடன் பழைய நினைவுகளை அசை போடுவது தவறு.
புதுவை காங்கிரசின் கடந்த நான்கரை ஆண்டு ஆட்சி காலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று ஜெகத்ரட்சகன் குற்றம் சாட்டுகிறார்.

இது உண்மைதான். ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது திமுகவுக்கு தெரியும். இங்கே காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் மத்திய பாஜக அரசிடம் இருந்து எந்த உதவியும் சரிவர கிடைப்பதில்லை.

இப்படிச் சொல்லும் தொழில் அதிபரான ஜெகத்ரட்சகன் ஏன் 26 ஆயிரம் கோடி ரூபாயை இலங்கையில் கொண்டு போய் முதலீடு செய்தார்?… அவர் புதுவையில் அந்தப் பணத்தை முதலீடு செய்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கலாமே?… எனவே இது பற்றியெல்லாம் பேச அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அவரே புதுவையில் திமுக முதல்வர் வேட்பாளராம். இதைக் கேட்டால்தான் இன்னும் நகைச்சுவையாக இருக்கிறது. புதுச்சேரி அரசியலைப் பொறுத்தவரை மண்ணின் மைந்தர்கள் தான் இங்கு கோலோச்ச முடியும். வேண்டுமானால் தமிழ்நாட்டில் இதை ஜெகத்ரட்சகன் முயற்சித்து பார்க்கலாம்.

திமுகவை வளரவிடாமல் சதி செய்வதாக 4 வருடங்கள் கழித்து திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் எங்களது ஆட்சியை அல்லவா அவர்கள் இப்போது கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது?… தமிழக காங்கிரசை மிரட்டி பணிய வைப்பதற்காகத்தான் திமுக இங்கு இப்படி நாடகம் ஆடுகிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

எங்களாலும் ஜெகத்ரட்சகன் போல் தடாலடியாக பேசமுடியும். ஆனால் அநாகரீக அரசியலில் நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை கொண்டது கிடையாது.

stalin-rahul- updatenews360

திமுகவின் இந்த திடீர் கொந்தளிப்பை சோனியாவும், ராகுல் காந்தியும் எளிதில் அடக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என்று பெயரைக் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். புதுவையில் காங்கிரசுடன் திமுக போடும் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ சண்டை உண்மையா? அல்லது மிரட்டல் நாடகமா?

தற்போது இடைவேளைதான் விடப்பட்டிருக்கிறது.
கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

Views: - 0

0

0