புதுச்சேரியில் அமலுக்கு வந்தது தளர்வில்லாத ஊரடங்கு…! போலீசார் தீவிர கண்காணிப்பு

18 August 2020, 10:34 am
Lockdown_UpdateNews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நிலைமைகளுக்கு ஏற்ப அவ்வப்போது ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் தினமும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டு இருந்தது. ஆனால் அதன் எதிரொலியாக சில வாரங்களாக கொரோனா வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது.

கொரோனா காரணமாக பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. தொற்று வேகம் அதிகரித்ததால் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு சில அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தளர்வில்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவது, கடைகளை காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை மட்டுமே திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந் நிலையில் அறிவித்தபடி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஊரடங்கின்போது பால் பூத்துகள், மருந்துக் கடைகள் மட்டும் திறக்க அனுமதி தரப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டு இருக்கும். ஊரடங்கின் போது வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.