பொங்கல் பரிசுத் தொகை ரத்து ஒருபுறம்… அரசு ஊழியர்களுக்கு 31% சிறப்பு போனஸ் மறுபுறம்… அதிர்ச்சியில் குடும்ப அட்டைதாரர்கள்!!!

Author: Babu Lakshmanan
29 December 2021, 8:31 pm
Quick Share

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வருகிற 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

ரொக்கமில்லா பொங்கல் பரிசு

இது மகிழ்ச்சிதரும் விஷயம் என்றாலும் கூட, இன்னொரு பக்கம் இந்தப் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லையே என்கிற எண்ணம் தமிழக மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.

அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் பொங்கல் பண்டிகைக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட்டும் திமுக அரசிடம் இதை வலியுறுத்தி இருக்கிறது.

தமிழக அரசு பொங்கலுக்கு பரிசுப்பணம் வழங்க வேண்டும் என்று குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்ப்பதற்கு நியாயமான காரணங்கள் பல உண்டு.

முந்தைய அதிமுக ஆட்சியில் 2019 மற்றும் 2020-ல் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் இரண்டு முறை தலா 1000 ரூபாய் பரிசுப் பணம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி 2021 பொங்கல் பண்டிகையின்போது கொரோனா பரவலால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் இப்பரிசுத் தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.

இப்படித் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொங்கலுக்கு பரிசுப் பணம் பெற்றதால், இயல்பாகவே எதிர்வரும் பொங்கலின்போது பணப்பரிசு கிடைத்தால் குடும்ப செலவை சமாளிக்க உதவுமே என்கிற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக, மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு வரும் பொங்கலை கொண்டாட 21 அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

அதேநேரம் மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்படைந்து இருப்பதாலும், கொரோனா பரவலால் வாழ்வாதாரம் இன்னும் முழுமையாக மீளாத நிலையிலும் பொங்கல் பரிசுத்தொகையாக குறைந்தபட்சம் 2500 ரூபாய் கொடுக்கப்படவேண்டும் என்பது பெரும்பாலான
தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ்

இன்னொரு பக்கம், அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ள 31 சதவீத அகவிலைப்படி உயர்வு, நடுத்தர ஏழை, எளிய மக்களின் முதுகில் விலைவாசி உயர்வு என்னும் பெரும் சுமையை ஏற்றி வைக்கும் என்றுபொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, சிறப்பு போனஸ் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் சுமார் 9000 கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். பொதுவாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு பெருமளவில் சம்பளமும், அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்படும் போதெல்லாம், விலைவாசி கடுமையாக உயரும் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.

TN Secretariat- Updatenews360

இதை சாமானிய மக்கள் சமாளிக்க, குடும்ப அட்டைதாரர்களுக்கு, இந்த இக்கட்டான தருணத்தில் முந்தைய அதிமுக அரசு பொங்கலுக்கு வழங்கியது போல் 2500 ரூபாய் கொடுத்தால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவியாக இருக்கும்” என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நகைக்கடன் தள்ளுபடி

அதேநேரம், பொங்கலுக்கு பரிசுப் பணம் எதுவும் இல்லை என்கிற அதிர்ச்சியோடு தற்போது இன்னொரு அதிர்ச்சியும் லட்சக் கணக்கானோரை கவலையில் மூழ்க வைத்து இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டது.

திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சட்டப் பேரவையில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து, தகுதியான நபர்களுக்கு நகைக் கடன் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான நிபந்தனைகளை
கூட்டுறவுதுறை பதிவாளர் வெளியிட்டு இருக்கிறார்.

அவற்றில் முக்கியமானவை:

  • ஏற்கனவே 2021ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கும் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தினருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படமாட்டாது.
  • நகைக் கடனை முழுமையாக திருப்பி செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

*40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் கடன் தள்ளுபடி இல்லை.

*ஆதார் எண்ணைத் தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

அரசு ஊழியர்களுக்கு மட்டுமா..?

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “கூட்டுறவுத் துறை பதிவாளர் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பார்த்தால் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேருக்கு தள்ளுபடி கிடைக்காது. 28 சதவீதம் பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்பது தெரிகிறது. தேர்தலின்போது அனைத்து நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதை நம்பி சுமார் 49 லட்சம் பேர் நகைக் கடன் பெற்றுள்ளனர். ஆனால் தற்போது 72 சதவீதம் பேர் கழித்துக் கட்டப்பட்டுவிட்டனர்.

சலுகை அளிக்கும் எந்தவொரு விஷயம் என்றாலும், தற்போது திமுக அரசு அதில் கடும் நிபந்தனைகளை விதிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெளிவாக கூறியிருக்கலாம். மக்களும் நகைகளை அடமானம் வைத்திருக்கமாட்டார்கள்.

தற்போது,பொங்கலுக்குள் வைத்த நகைகளை திருப்பி விடலாம் என்று நம்பி இருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கும் விஷயம்தான்.

ஒரு பக்கம் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. அவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ரொம்பவே தயக்கம் காட்டுகிறது.

எனவே அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு போன்ற முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றி மக்களை விலைவாசி உயர்வின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றவேண்டும். அது, தமிழக மக்களுக்கு திமுக அரசு அளிக்கும் உண்மையான பொங்கல் பரிசாக இருக்கும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 359

0

0