“வெல்லம் உருகுதய்யா”… பாடல் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பை Troll செய்யும் நெட்டிசன்கள்…!!! கலாய்த்த முன்னாள் அமைச்சர்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
12 January 2022, 2:11 pm
Quick Share

பொங்கல் பரிசு தரமற்று இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக, தமிழக அரசை பாடல் மூலம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தைப் பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசின் சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்கள் தரமற்று இருப்பதாக, அதனைப் பெற்றுக் கொண்ட மக்கள் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கரும்பு உயரம் குறைவாக இருப்பதாகவும், வெல்லம் உருகிய நிலையில் காணப்படுவதாகவும், ரவையில் பூச்சி இருப்பதாகவும் அடுத்தடுத்து குற்றம்சாட்டப்பட்டது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, திருத்தணியில் ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது தமிழக அரசின் மீது கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

இந்த வீடியோக்களை காண்பித்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், திமுக அரசை கடுமையாக சாடினார். இதனால், பொங்கல் பரிசு பொருட்களின் தரம் குறித்து கேள்வி எழுந்தது. உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலினும் பொங்கல் பரிசுத் தொகுப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இருப்பினும், சமூக வலைதளங்களில் புகார் வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசை விமர்சித்து சமூகவலைதளங்களில் Troll வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளாவது, ‘ வெல்லம் உருகுதய்யா.. முருகா, விடியல் ஆட்சியலியே, பல்லி புதைத்திடவே, அவர்க்கு புளிதான் கிடைத்ததப்பா,” என்று முருகன் பாடலை வைத்து கிண்டல் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெல்லம் உருகுதய்யா விடியல் ஆட்சியிலே… நியாயவிலைக் கடைகளில் விடியா அரசின் வடியும் வெல்லம்,” எனக்கு குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

Views: - 414

0

0