பொங்கல் பரிசு தொகுப்பால் அரசுக்கு அவமானம்.. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை : ஸ்டாலின் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
21 January 2022, 5:11 pm
Quick Share

சென்னை : பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இடம்பெற்றிருப்பதாக அடுத்தடுத்து குவிந்த புகாரைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடுகள் நடந்ததாகவும், தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் பொதுமக்கள் புகார் மேல் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழர்‌ திருநாளாம்‌ தைப்‌ பொங்கல்‌ திருநாளைச்‌ சிறப்பாகக்‌ கொண்டாடும்‌ வகையில்‌, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌, இலங்கைத்‌ தமிழர்‌ மறுவாழ்வு முகாமில்‌ உள்ள குடும்பத்தினருக்கும்‌ என மொத்தம்‌ 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில்‌ சிறப்பு பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்கள்‌.

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்கள்‌ தரமானதாகவும்‌, எண்ணிக்கை குறைபாடு இல்லாமலும்‌ இருக்க வேண்டுமென்பதில்‌ அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, அதற்கு முறையான விதிமுறைகளை வகுத்து, அதன்படி பொங்கல்‌ தொகுப்புப்‌ பையினை விநியோகம்‌ செய்திட ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

பொங்கல்‌ பரிசுப்‌ பொருட்கள்‌ அனைத்தும்‌ முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம்‌, சரியான விலைக்கு கொள்முதல்‌ செய்யப்பட்டன; கடந்த ஆட்சிக்‌ காலத்தில்‌ 6 பொருட்கள்‌ வழங்கப்பட்ட நிலையில்‌, நடப்பு ஆண்டில்‌ 21 பொருட்கள்‌ கொள்முதல்‌ செய்து வழங்கப்பட்டன. மேலும்‌, தற்போது வழங்கப்பட்ட பொருட்களின்‌ எண்ணிக்கை மட்டுமல்லாமல்‌, அவை கூடுதல்‌ எடையளவில்‌ வழங்கப்பட்டுள்ளதும்‌ குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில்‌ பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு விநியோகம்‌ நல்ல முறையில்‌ நடைபெற்றிருந்த நிலையில்‌, மாநிலத்தின்‌ ஒரு சில பகுதிகளில்‌ சில நிறுவனங்கள்‌ மூலம்‌ வழங்கப்பட்ட பொருட்களில்‌ சில குறைபாடுகள்‌ இருந்ததாக புகார்கள்‌ அரசுக்கு வரப்பெற்றன. இவற்றை விசாரித்து உடனுக்குடன்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டது; உரிய தரத்துடன்‌ பொருட்களை வழங்கத்‌ தவறிய நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனைத்‌ தொடர்ந்து பரிசுத்‌ தொகுப்பு விநியோகம்‌ குறித்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடத்தினார்கள்‌. இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, பொங்கல்‌ பரிசுப்‌ பொருட்கள்‌ கொள்முதல்‌ மற்றும்‌ விநியோகத்தின்போாது துறையால்‌ பின்பற்றப்பட்ட நடைமுறைகள்‌ குறித்து அலுவலர்கள்‌ விளக்கினர்‌. மேலும்‌, தரக்‌ கட்டுப்பாடு குறித்த விவரங்களும்‌ இக்கூட்டத்தில்‌ ஆய்வு செய்யப்பட்டது.

விரிவான ஆய்வுக்குப்‌ பின்னர்‌, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, பொங்கல்‌ பரிசுப்‌ பொருட்கள்‌ விநியோகத்தில்‌ புகார்கள்‌ எழக்‌ காரணமான அலுவலர்கள்‌ மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும்‌, தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள்‌ மீது, கருப்பு பட்டியலில்‌ சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும்‌ நடவடிக்கைகளை எடுக்கவும்‌ அறிவுறுத்தினார்‌. பொது மக்களுக்கு அனைத்து வகையிலும்‌ தரமான பொருட்கள்‌ மட்டுமே வழங்கப்பட வேண்டுமெனவும்‌, அரசின்‌ நற்பெயருக்குக்‌ களங்கம்‌ ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம்‌ கொண்டும்‌ அனுமதிக்க இயலாது எனவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்‌.

மேலும்‌, நியாய விலைக்‌ கடைகளில்‌ பொது மக்களுக்கு வழங்கப்படும்‌ பொருட்கள்‌ எப்போதும்‌ தரமானதாகவும்‌, உரிய எடையிலும்‌ விநியோகம்‌ செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள்‌ உறுதிப்படுத்திட வேண்டுமென்றும்‌, தவறு செய்வோர்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இக்கூட்டத்தில்‌, மாண்புமிகு கூட்டுறவுத்‌ துறை அமைச்சர்‌ இ.பெரியசாமி, மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ அமைச்சர்‌ திரு.அர.சக்கரபாணி மற்றும்‌ நிதித்‌ துறை, கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

Views: - 415

0

0