சீமானை குறிவைத்த பிரசாந்த் கிஷோர்.. திடீரென வெளியான வீடியோ… தமிழக அரசியலில் சலசலப்பு!!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 7:42 pm
Quick Share

தமிழகத்தில் கட்டுமானம் சார்ந்த தொழில்கள், பின்னலாடை நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல நகரங்களில் தமிழர்களால் கடுமையாக தாக்கப்படுவதாகவும் இதனால் உயிருக்கு பயந்து பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் ரயில்கள் மூலம் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் ஒரு செய்தி கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வீடியோக்களுடன் காட்டுத்தீ போல வேகமாக பரவியது.

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் வடமாநில இளைஞர்களால் பறிக்கப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த சமூக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டும் பரபரப்பு காட்டின.

ஆனால் அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை, வேறு மாநிலங்களில் எப்போதோ நடந்த தாக்குதல் சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்ததுபோல சித்தரித்து தமிழக மக்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இப்படி வதந்தி பரப்புகின்றனர் என்பதை மாநில போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி கூறிய பின்பு வட மாநிலங்களில் ஏற்பட்ட பதற்றம் அப்படியே அமுங்கிப் போனது. இங்கும் அவர்களின் பயம் நீங்கியது. மேலும் ஹோலி பண்டிகையை சொந்த ஊரில் சிறப்பாக கொண்டாடுவதற்காகவே வடமாநில இளைஞர்கள் இப்படி ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாக ரயில்களில் பயணம் மேற்கொண்டனர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளும் குறிப்பிடும்படி இருந்தன.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை. வேண்டும் என்றே வதந்தி பரப்பப்படுகிறது என அறிக்கை விட்டார். அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே என் நேரு, பொன்முடி, மூர்த்தி, தயாநிதிமாறன், டி கே எஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா ஆகியோர் முன்பு பேசிய வீடியோ காட்சிகளையும் இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். இது பெரும் விவாத பொருளாக மாற அண்ணாமலை மீதும் வதந்தி பரப்பியதாக தமிழக போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அண்ணாமலையும் முடிந்தால் என்னை 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என்று தமிழக காவல்துறைக்கு சவாலும் விட்டார்.

இந்த நிலையில் பீகார் மாநில அரசு அதிகாரிகள் குழு ஒன்றும் தமிழகத்திற்கு வந்து, தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்று உறுதி செய்தது. மேலும்
பீகார் மாநில தொழிலாளர் விவகாரத்தில் திமுக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகுந்த திருப்தி அளிப்பதாகவும் அந்த குழு தெரிவித்தது.

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 2021 தமிழக தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் “தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிஜமாவே நடக்கின்றன. விரைவில் இது தொடர்பான உண்மையான வீடியோவை வெளியிடுவேன், இந்த விஷயத்தில் சில பத்திரிகையாளர்கள் தவறான வீடியோக்களை பகிர்ந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் உண்மையிலும் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது “என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் இன்னும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அவர் இப்படி சொன்ன அடுத்த இரண்டு நாட்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் பேசும் சீமான், “இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. வன்புணர்வு பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் என்று பேசி உள்ளார். அவரின் இந்த வீடியோவை இந்தியில் மொழி பெயர்த்தும் பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டு உள்ளார்.

இப்படி சீமான் பேசிய வீடியோவை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டு இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“இப்போது எந்தக் கட்சிக்கும் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுப்பது இல்லை. என்றாலும் கூட அவர் இன்னும் திமுகவுக்கு ஆதரவாகவே செயல்படுவது பளிச்சென்று தெரிகிறது. மேலும் அரசியல் ரீதியான ஆலோசனைகளை திமுகவுக்கு தொடர்ந்து கூறி வருகிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் சீமான் தொடர்பான வீடியோவை மட்டும் அவர் தேடிப்பிடித்து வெளியிட்டு இருக்கிறார்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

“உண்மையிலேயே சீமான் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்களை தமிழகத்திலிருந்து வெளியேற்றும் நோக்குடன் இப்படி ஆவேசமாக பேசினாரா?… என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் அண்ணாமலை வெளியிட்ட வீடியோக்களை பார்க்கும்போது பல கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள தொழிலாளர்களையும், அவர்கள் இங்கு செய்யும் தொழிலையும் மிக ஏளனமாக பேசி இருப்பது தெரியும். அப்படி பேசியவர்கள் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பற்றி இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை.

தவிர பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான ஒருவரே இந்த குற்றச்சாட்டை சீமான் மீது வைப்பதன் மூலம் இப்பிரச்சனை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேநேரம், சீமானை இந்த விவகாரத்தில் சிக்க வைப்பதன் மூலம் பிரசாந்த் கிஷோர் அவரை தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் கட்சி தலைவர் போல உருவாக்கி மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளும் நோக்கமும் தென்படுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கூட கடைசி நேரத்தில் காங்கிரசுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே தான் கடுமையான போட்டி இருக்கிறது என்பது போன்ற ஒரு பிம்ப கட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோரின் மூளை பயன்படுத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

ஏனென்றால் பிரசாந்த் கிஷோர் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து என்னிடம் உண்மையான வீடியோ ஆதாரங்கள் நிறைய இருக்கிறது என்றுதான் முதலில் சொன்னார். ஆனால் கடைசியில் சீமானை மட்டும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

திமுக அரசு சீமானை கைது செய்து சிறையில் தள்ளுவதன் மூலம் அவருடைய கட்சியை பிரபலமடையச் செய்து இரண்டாம் இடத்திற்கு கொண்டுவர பிரசாந்த் கிஷோர் விரும்புவதன் காரணமாகவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறாரோ என சந்தேகமும் எழுகிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 286

0

0