தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணம் செலுத்த செப்.,30 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!

7 September 2020, 5:38 pm
Chennai High Court - Updatenews360
Quick Share

சென்னை : தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணத்தை செலுத்த செப்.,30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிக் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் காணொளி வாயிலாக ஆஜரானார்.

அப்போது, அவர் அளித்த பதிலில், “75 தனியார் பள்ளிகள் மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்கள் வந்துள்ளன. அதில், இதுவரை 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் மீதான புகார்கள் விசாரணையில் உள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், அரசு உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் 40% முதல் தவணைக் கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 30 வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 5

0

0