சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள்…தனியார், ஊடக ஊழியர்களுக்கு அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

5 November 2020, 8:24 am
1southern railway - updatenews360
Quick Share

சென்னையில் சிறப்பு புறநகர் ரயில்களில் தனியார், ஊடக ஊழியர்களும் செல்ல அனுமதி அளித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் புறநகர் மின்சார ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல், மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களையும், மின்சார ரயிலில் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வர்த்தக துறையில் இருந்து சென்னை கோட்ட ரெயில்வே மேலாளருக்கு அனுப்பிய கடிதத்தில்,

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்,

அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்,

அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள்,

தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்,

சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்,

குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்,

அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்,

பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான அங்கீகார கடிதத்தையும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின்போது காட்டவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 42

0

0