அறிவுரைகளை வழங்குங்க.. ஆர்டர் போடாதீங்க : ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநிலங்களை கட்டுப்படுத்த முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 12:34 pm
SC Gst - Updatenews360
Quick Share

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா கூட்டாட்சி தத்துவ நாடு என்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு நம்பத் தகுந்த மதிப்பு மட்டுமே உண்டு எனவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல என்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய , மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்ற தீர்ப்பினை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது.

மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சம உரிமை உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Views: - 539

0

0