புதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி..! உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..!

28 February 2021, 7:59 pm
puducherry_speaker_sivakolundhu_updatenews360
Quick Share

தனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

லெப்டினன்ட் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் நகல், ஊடகவியலாளர்களுக்கும் சபாநாயகர் சார்பில் பகிரப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவரான சிவகொழுந்து, சுகாதார அடிப்படையில் மட்டுமே சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

பின்னர், ஊடகங்களிடம் பேசிய சிவக்கொழுந்து, லெப்டினன்ட் கவர்னருக்கு அனுப்பப்பட்ட ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற செயலாளரிடம் ஒப்படைத்ததாக கூறினார்.

சிவக்கொழுந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் லாஸ்பெட் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆனது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், சிவக்கொழுந்துவின் சகோதரர் வி.பி.ராமலிங்கம் காரைக்காலில் பாஜகவில் சேர்ந்தார்.

மேலும், பிப்ரவரி 21’ஆம் தேதி எம்.எல்.ஏ பதவியை விட்டு விலகிய முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வெங்கடேசன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.லட்சுமிநாராயணன் ஆகியோர் இன்றைய பொதுக் கூட்டத்தில் உரையாற்ற காரைக்கல் சென்றிருந்த அமித் ஷா முன்னிலையில் காரைக்காலில் பாஜகவில் சேர்ந்தனர்.

முன்னதாக காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து நாராயணசாமி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 22 அன்று வீழ்ந்தது. இதையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 6’ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0