இருக்கும் வரை கல்வி தானம்…. இறந்த பிறகு கண் தானம் : புனித் ராஜ்குமாருக்கு ரசிகர்கள் Hats-Off!!

Author: Babu Lakshmanan
29 October 2021, 6:51 pm
puneeth rajkumar 4- updatenews360
Quick Share

பெங்களூரூ : நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு செய்த உதவிகளோடு, அவர் மறைந்த பிறகு செய்த காரியம் அனைவரையும் மேலும் உருக்கியுள்ளது.

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமார், மறைந்த முன்னாள் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனாவார். பிட்னஸில் ஆர்வம் கொண்ட இவர், பெரும்பாலான நேரங்களை ஜிம்மிலும், உடற்பயிற்சி செய்வதிலுமே கவனம் செலுத்துவார். அப்படி, இன்று காலை வழக்கம் போல, ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர் பெங்களூரூவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். புனித்தின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் புனித் ராஜ்குமார் உயிருடன் இருக்கும் போது செய்த உதவிகள் ஏராளம். குறிப்பாக, அவர் ஏழை, எளிய குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்காக 45 இலவச பள்ளிகளை தனது சொந்த செலவில் நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், 1,800 மாணவர்களுக்கு கல்விச் செலவை ஏற்றுள்ளார். மேலும், 26 ஆதரவற்றோர் காப்பகமும், 16 முதியோர் இல்லமும், 19 கால்நடை பராமரிப்பு மையங்களையும் அவர் நடத்தி வருகிறார்.

puneeth rajkumar 3- updatenews360

இந்த நிலையில், அனைத்திற்கும் மேலாக தற்போது தனது இரு கண்களையும் அவர் தானம் செய்துள்ளார். அவரின் இரு கண்களும் பெங்களூரூவில் உள்ள நாராயணநேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டது.

இருந்த வரையில் பல்வேறு உதவிகளை செய்து வந்த புனித் ராஜ்குமார், மறைந்த பிறகு பிறருக்கு உதவி செய்திருப்பது அவரது ரசிகர்களை மேலும் பெருமையடையச் செய்துள்ளது.

Views: - 518

1

0