சித்து’ விளையாட்டில் சிக்ஸர்..! ‘கிளீன் போல்ட்’ ஆன காங்கிரஸ்

19 July 2021, 7:42 pm
Quick Share

டெல்லி காங்கிரஸ் தலைமை ஒரு வழியாக பஞ்சாப் சிக்கலுக்கு தீர்வு கண்டுள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் சோனியா, ராகுலுக்கு இணையாக ரொம்பவே பிரயத்தனப்பட்டு வருபவர், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங்.

சித்து தலைமையில்கோஷ்டி

சோனியாவிடம், நன்மதிப்பைப் பெற்றுள்ள பாட்டியாலா மன்னர் குடும்பத்தை சேர்ந்தவரும் ராணுவத்தின் முன்னாள் கேப்டனும் ஆன 79 வயது அமரீந்தர் சிங், கட்சி மேலிடத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையால்தான் 2022 தேர்தலுக்காக அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சில மாதங்களுக்கு முன்பு தனது முதன்மை செயலாளராக நியமித்துக் கொண்டார்.

ஆனால் இதற்கு அவருடைய கட்சியிலேயே மறைமுக எதிர்ப்பு கிளம்பியது.

Amarinder Singh - sidhu - updatenews360

எல்லா மாநிலங்களிலும் காங்கிரசில் பல கோஷ்டிகள் இருப்பதுபோல பஞ்சாபிலும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து தலைமையில் ஒரு கோஷ்டி செயல்பட்டு வருகிறது.

2004 முதல் 2014 வரை பாஜக சார்பில் பஞ்சாப் அமிர்தசரஸ் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான், நவ்ஜோத் சிங் சித்து.

‘சித்து’ விளையாட்டு

ஆனால் 3-வது முறையாக அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. எனினும் அவரை டெல்லி மேல்-சபை எம்பியாக நியமித்தது. 2 ஆண்டுகள் அப்பதவியை வகித்த நிலையில் ஒரு நாள் திடீரென்று பாஜகவுக்கு ‘ஷாக்” கொடுத்தார்.

அக்கட்சியில் இருந்து விலகிய சித்து காங்கிரஸில் சேர்ந்தார். 2017 சட்டப்பேரவை தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் வென்ற அவருக்கு காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.

தான், காங்கிரஸில் இணைந்த பிறகே, பஞ்சாபில் 10 வருடங்கள் வனவாசத்தில்
இருந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது, அதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கும் உதவியது என்று சித்து கருதத் தொடங்கினார். அதனால் தனக்கு சாதாரண அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பதாக நினைத்து 2 ஆண்டுக்கு பின் அதை ராஜினாமாவும் செய்தார்.

அதன்பிறகு, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக ஆட்டம் காட்டத் தொடங்கினார்.
அது ‘சித்து’ விளையாட்டாக இருந்தது. மெல்ல மெல்ல தனது பக்கம் 20 எம்எல்ஏக்கள் வரை அவர் இழுத்து விட்டார். அவர்கள் அனைவரும் சித்துவின் தலைமையில் வெளிப்படையாகவே செயல்பட ஆரம்பித்தனர்.

அவர்கள் கடந்த ஓராண்டாக சித்துவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு கடிதம் எழுதத் தொடங்கினர். ஆனால் சோனியா அசைந்து கொடுக்கவில்லை. ராகுலும், பிரியங்காவும் சித்து கிரிக்கெட்டில் காட்டிய அதிரடியால் ஈர்க்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் சித்துவின் பக்கம் நின்றாலும் கூட துணை முதலமைச்சர் பதவியை ஒதுக்குவதற்கு அமரீந்தர் சிங் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் இரு கோஷ்டிகளின் தலைவர்களும் மாறி மாறி டெல்லிக்கு படையெடுக்கத் தொடங்கினர். சித்துவும், அவருடைய ஆதரவாளர்களும் முதலமைச்சருக்கு எதிராக டுவிட்டரில் அவ்வப்போது மறைமுக கண்டனங்களையும் பதிவு செய்தனர்.

இந்த நிலையில்தான் அமரீந்தர் சிங், தனது முதன்மை ஆலோசகராக அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நியமித்துக் கொண்டார். அதன்பிறகுதான், பஞ்சாப் காங்கிரசில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியது.

மறைமுக மிரட்டல்

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, சித்துவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று போர்க் குரல் எழுப்பி வந்த அவருடைய ஆதரவாளர்கள் திடீரென ‘டிராக்’ மாறினர். சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுங்கள் என்று சோனியாவுக்கும், ராகுலுக்கும் தொடர்ந்து அழுத்தம் தரத் தொடங்கினர். இடையில் சித்து, ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சில ட்வீட்களை போட காங்கிரஸ் மேலிடம் அதிர்ந்துதான் போனது. அவர் ஆம் ஆத்மிக்கு தாவலாம் என்ற தகவலும் பரவியது.

சித்து அடித்த அதிரடி சிக்ஸர்களால், டெல்லி காங்கிரஸ் மேலிடம் ‘கிளீன் போல்ட்’ ஆகிப்போனது.
முதலில் சித்துவை டெல்லிக்கு அழைத்து ராகுலும், பிரியங்காவும் சமாதானம் பேசினர். பின்னர் அமரீந்தர் சிங்கை சோனியா சமரசம் செய்தார்.

Rahul_Sonia_UpdateNews360

முதன்மை ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும் இந்த சிக்கல்களை விடுவிப்பதற்காக டெல்லியில் தொடர்ந்து ஒரு வாரம் முகாமிட்டு ராகுல், பிரியங்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகுதான், சோனியா என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று அமரீந்தர் சிங் அண்மையில் வெளிப்படையாக அறிவித்தார்.

ஒருவழியாக சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சோனியாவால் நியமிக்கப்பட்டார். மேலும் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் சித்துவுக்கு உதவும் வகையில் 4 செயல் தலைவர்களையும் சோனியா நியமித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

அதேநேரம், அமரீந்தர் சிங் பரிந்துரை செய்த 4 பேரின் பெயர்களையும் சோனியா புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப் காங்கிரசில் மீண்டும் சலசலப்பு சத்தம் பலமாக கேட்கத் தொடங்கியிருக்கிறது.

“கடந்த 3 மாதங்களில் சித்து எனக்கு எதிராக 150 ட்விட்டுகளை போட்டுள்ளார். இதற்காக அவர் என்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் அவரை சந்திக்க மாட்டேன்” என்று அமரீந்தர் சிங் அதிரடி காட்டி இருக்கிறார்.

அமரீந்தர்சிங்கிற்கு அவமானம்

இன்னொரு பக்கம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் யாரும் சித்துவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அமரீந்தர் சிங்கின் மனைவியும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், பாட்டியாலா நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான பிரினீத் கவுர் அவர்களுடன் மறைமுகமாக போனில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.

பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தம் 80 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 30 பேர், மாநில கட்சியின் தலைவராக சித்து அறிவிக்கப்பட்ட உடனேயே அவரை நேரில் சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். அமரீந்தர் சிங்கை 10 எம்எல்ஏக்கள் மட்டுமே உறுதியாக ஆதரிக்கின்றனர். மீதமுள்ள 40 பேரும் வருகிற தேர்தலில் தங்களுக்கு போட்டியிட சீட் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் யார் பக்கமும் சாயாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டு இருப்பதால் வேட்பாளர்கள் தேர்வில் அவருடைய கையே ஓங்கும் என்று அமரீந்தர் சிங் கருதுகிறார். இதனால் தனது ஆதரவாளர்களுக்கு, போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலை உருவாகலாம் என்றும் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்று தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டாலும் கூட சித்துவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நெருக்கடி நிலை உருவாகும் என்றும் அவர் நினைக்கிறார். மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால், கட்சியில் தனக்குள்ள அதிகாரத்தை அமரீந்தர் சிங்
விட்டுக்கொடுக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. அதனால்தான் சித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர் பிடிவாதம் காட்டி வருகிறார்.

punjab_cm_amarinder_singh_updatenews360

சித்துவின் ஆதரவாளர்களோ, “இன்னும் எவ்வளவு காலம்தான் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டே அமரீந்தர் சிங் அதிகாரம் செலுத்துவார். அதெல்லாம் மலையேறிப் போய்விட்டது. அடுத்த தலைமுறையினர் கட்சியை நடத்திச் செல்ல அவர் வழிவிடவேண்டும். இல்லையென்றால் கட்சி மேலிடத்திடம் அவருக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்” என்கின்றனர்.

என்றபோதிலும், மாநில தலைவராக சித்துவை நியமித்ததன் மூலம் கட்சி மேடம் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவே அமரீந்தர் சிங் கருதுகிறார்.

அவருடைய ஆதரவாளர்களோ, “முதலமைச்சரும் ஒரு சீக்கியர், மாநில கட்சியின் தலைவரும் ஒரு சீக்கியர் என்றாகி விட்டதால் வரும் தேர்தலில் இந்துக்களின் ஓட்டுகளை பெறுவது கடினமாக இருக்கும். அதற்காகத்தான் ஒரு இந்து எம்எல்ஏவை மாநிலத் தலைவராக நியமிக்கும்படி அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டார். அதையும் கட்சி மேலிடம் புறக்கணித்து விட்டது. அமரீந்தர் சிங் குடும்ப செல்வாக்கால்தான் காங்கிரசுக்கு இங்கே மதிப்பு. நிச்சயம் எங்கள் முதலமைச்சர் சித்துவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்” என்கின்றனர்.

மொத்தத்தில், காங்கிரசுக்கு தலைவலி போய் திருகுவலி வந்துள்ளது, என்பது மட்டும் நிஜம்!

Views: - 139

0

0