தனித்து போட்டியா ? ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…!!!

25 January 2021, 9:00 pm
Congress - dmk - cover - updatenews360
Quick Share

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.

காங்கிரசை கழற்றிவிடலாமா? என்று திமுகவும், நாம் கேட்கும் எண்ணிக்கையிலான தொகுதிகளை தர மாட்டார்களா? என்று காங்கிரஸ் நினைப்பதாலும் இப்போதைக்கு இது பற்றி
எந்தப்பேச்சும் இருக்காது என்பதே உண்மை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கூட ஓரிரு வாரங்கள் இதே இழுபறி நிலைதான் நீடிக்கும் என்கிறார்கள். முந்திக் கொண்டு பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கினால், அக்கட்சி கேட்கும் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை திமுக இறங்கிச் செல்ல நேர்ந்தால் காங்கிரசுக்கு திருப்திகரமான அளவில் தொகுதிகளை ஒதுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ‘விடாக்கண்டன் கொடாக்கண்டன்’ போன்றுதான் திமுக -காங்கிரஸ் கூட்டணி உறவு உள்ளது.

Rahul Gandhi- Updatenews360

இந்த நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூன்று நாள் தேர்தல் பிரச்சார பயணமாக கடந்த 23-ந்தேதி தமிழகம் வந்தார். கொங்குமண்டல மாவட்டங்களில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதை போலவே அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரசுக்கு செல்வாக்கு உண்டு. இதில் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு உள்ளது. மற்ற மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வலிமையுடன்தான் திகழ்ந்தது. தற்போதும் கூட அக்கட்சி இந்த மாநிலங்களில் ஓரளவு வலுவுடனே உள்ளது.

அப்படி இருக்கும்போது ராகுல் ஏன் தமிழகத்தில் முதன்முதலாக பிரச்சாரத்தை தொடங்கினார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
முதலில் தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்துவிட்டால், மற்ற மாநிலங்களுக்கு ஆற அமர சென்று பிரச்சாரம் செய்யலாம் என்பது அவருடைய திட்டம். ஆனால் அவர் எதிர்பார்த்தது தமிழ்நாட்டில் நடக்கவில்லை.
தலை குப்புற கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, வேறு வழியின்றி ஏற்கனவே வகுத்த திட்டத்தின்படி தமிழகத்தில் பரப்புரைக்கு வந்துவிட்டார்.

தொகுதி பங்கீடு பேச்சு நடக்காத நிலையில், ராகுல் பிரச்சாரத்திற்கு வருவதால் கூட்டம் சேருமா? என்ற சந்தேகம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி உட்பட எல்லா தலைவர்களுக்கும் வந்துவிட்டது. கூட்டம் சேரவில்லை என்றால் அது மிகவும் கேலிக்கூத்தாகிவிடும் என்று பயந்த அவர்கள் கூட்டம் சேர்ப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் செய்யும் வழக்கமான உத்தியை கையாளத் தொடங்கினர்.

3 மணி நேரம் காத்திருக்க தலைக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை என பேசப்பட்டது. உள்ளூர் தலைவர்களும் படாதபாடுபட்டு கட்சியினரை உசுப்பி விட்டனர். இதனால்தான் ராகுல்காந்தி கோவை வந்தபோது அவர் பிரமித்துப்போகும் அளவில் மக்கள் கூட்டம் திரண்டது.

இதேபோல்தான் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நல்ல கூட்டம் வந்தது. இப்படி ராகுலுக்கு அதிக அளவு கூட்டம் திரண்டதை பார்த்து திமுக அதிர்ந்துபோனது. தானாக சேர்ந்த கூட்டம் இல்லை என்றாலும்கூட, இவ்வளவு பேரை எப்படி திரட்டினார்கள் என்பது திமுகவிற்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அண்மையில் ஸ்டாலின் கோவை வந்தபோது கூடியதை விட பலமடங்கு கூட்டம் ராகுலுக்கு கூடியதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. இதை வைத்து காங்கிரசார் அதிக தொகுதிகளை கேட்பார்களோ என்ற கலக்கம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது.

ராகுல்காந்தியின் இந்த மூன்று நாள் பிரச்சாரத்தின்போது எந்த இடத்திலும் மருந்துக்குக்கூட திமுகவினரை பார்க்க முடியவில்லை. அதுமட்டுமன்றி திமுக கூட்டணிக் கட்சிகளும் கூட இதில் பங்கேற்காமல் புறக்கணித்தன. அதாவது இந்த பிரச்சாரம் முழுக்க முழுக்க காங்கிரஸ் தனித்தே போட்டியிடுவதற்கான பிரச்சாரம் போலவே அமைந்திருந்தது.

இந்த 3 நாட்களில் ராகுல் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். சில இடங்களில் சாலையோரம் சிறு அளவில் மக்கள் கூடி இருந்தாலும், அவர்களை பார்த்து கைகளை அசைத்தார். திறந்த வேனில் இருந்து இறங்கி சாலையோர டீக்கடையில் டீயும் குடித்தார். இப்படி மக்களை ஒரு தேசிய கட்சியின் தலைவர் அணுகிய விதம் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

அதே நேரம் திமுகவுடன் தொகுதி பங்கீடு ஏற்படாத நிலையில், பரப்புரையின்போது ராகுலுக்கு எதைப் பற்றி விரிவாக பேசுவது என்று குழப்பம். அதனால் போகும் இடங்களில் எல்லாம் பொத்தாம் பொதுவாக பேசுவதைக் காண முடிந்தது.

தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று கூறிய அவர், நடைபெற இருப்பது சட்டப்பேரவைத் தேர்தல் என்பதையும் மறந்து மத்திய பாஜக அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்தார். அதேநேரம் மறந்தும் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் விதமாக, ஒரு இடத்தில் கூட அவர் திமுக பற்றி குறிப்பிட்டு பேசவில்லை.

ராகுல் இப்படி தனித்து பிரச்சாரம் செய்தது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், “காங்கிரஸ் தனித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. அதை திமுக வரவேற்கிறது” என்று கிண்டலடித்துள்ளார்

துரைமுருகன் எப்போதுமே இரு கருத்து வருவதுபோல் பேசுவதில் கில்லாடி. அவருடைய இந்த பேச்சில் காங்கிரஸ் மீதான அதிருப்தியும், நழுவலும் ஒரு சேர தென்படுகிறது. அதாவது கூட்டணி ஏற்பட்டாலும் சரி, ஏற்படாவிட்டாலும் சரி அதற்கு பொருந்துகிற மாதிரியான சமாளிப்புதான் இது.

அதேநேரம் ராகுலின் பிரச்சாரத்திற்கு வந்த கூட்டம் திமுக தலைமைக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “ராகுல் பிரச்சாரத்துக்கு எப்படி கூட்டம் கூடியது என்பது எங்களுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் கூட்டத்தை கூட்டி பலம் காட்டுவது எல்லா அரசியல் கட்சிகளும் கையாளக்கூடியதுதான். இதற்கெல்லாம் திமுக பணிந்து விடாது.

Congress DMK - updatenews360

கொங்கு மண்டலத்தில் எப்படியும் 10 சீட்டுகளுக்கு குறையாமல் வாங்கிவிட வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது.
அதற்கு அடிபோடும் விதமாகத்தான் ராகுல் இங்கே முதலில் பிரச்சாரத்தை தொடங்கினார். இதெல்லாம் திமுக மேலிடத்திற்கு தெரியாது என்று தமிழக காங்கிரஸ் நினைக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தால் அதற்கு மொத்தம் 15 தொகுதிகள் கிடைப்பதே பெரிய விஷயம். அதுவும் கொங்கு மண்டலத்தில் 2 தொகுதிக்கு மேல் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தரும். காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல்கூட திமுகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும்” என்றனர்.

எனினும் ராகுல்காந்தியின் முதற்கட்ட தமிழக தேர்தல் பிரச்சாரம் திமுகவுக்கு சற்று நடுக்கத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. காங்கிரஸ் 30 தொகுதிகள் கேட்டு மல்லுக்கட்டி விடக்கூடாது என்ற கவலையே இதில் அதிகம் தெரிகிறது.

Views: - 0

0

0