திமுகவின் புதிய ஆசை : தமிழகத்தில் கூட்டு புதுவையில் வேட்டு

23 January 2021, 12:17 pm
DMK - congress - cover - updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவர் வந்து சென்ற பின்பு தமிழக அரசியலில் மட்டுமின்றி பக்கத்து மாநிலமான புதுவையிலும் ஏகப்பட்ட திருப்பங்கள், அதிர்ச்சி நிகழ்வுகள் அரங்கேறின.
இதில் அதிக மன உளைச்சலுக்கும், அவமானத்துக்கும் உள்ளாகி இருப்பது டெல்லி காங்கிரஸ் மேலிடம்தான். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் மூவரும்.

ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதற்காகவா அவர் தனி விமானத்தில் மதுரைக்கு வந்திருப்பார்?… இத்தனைக்கும் அவனியாபுரத்தில் அவர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தது வெறும் அரைமணி நேரம்தான்.
ஜல்லிக்கட்டைப் பார்க்க மட்டுமே அவர் வரவில்லை…வேறு ஏதோவொரு பெரிய எதிர்பார்ப்பிலும் ராகுலின் மதுரை விசிட் இருந்துள்ளது.

அதுபற்றிய தகவல்கள் டெல்லியில் இருந்து இப்போதுதான் மெதுவாக கசியத் ஆரம்பித்து இருக்கிறது.

அது என்னவாக இருக்கும்?… யெஸ். உங்கள் யூகம் சரிதான்!

திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்து தொகுதிகளை முடிவு செய்வதற்காகவே அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அன்று மதுரை வந்துள்ளார். இதுபற்றிய தகவல் திமுக தலைமைக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டும் இருந்தது. இந்த பயணத்திட்டத்தின்படி ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அருகருகே அமர்ந்து பார்ப்பது, அதன்பின் மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்வது என திட்டமிடப்பட்டிருந்தது.

2011 தேர்தலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகளை திமுக ஒதுக்கியது.
2016-ல் 22 தொகுதிகளை குறைத்து 41 இடங்கள் தந்தது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு இதைவிட மிகக் குறைவான இடங்களே கிடைக்கும் என்று டெல்லி மேலிடத்துக்கு தமிழக காங்கிரஸ் தகவல் தெரிவித்திருந்தது. அதாவது, நமக்கு 30 இடங்கள் வரை திமுக ஒதுக்கலாம் என தெரிகிறது என்று கூறியிருந்தனர்.

stalin-rahul- updatenews360

தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுக்கு இடம் கொடுக்காமல் திமுக இழுத்தடித்து வந்ததால், சரி 30 தொகுதிகள் நமக்கு கிடைத்தால் கூடபோதும் என்று ராகுல்காந்தியும் மனதை தேற்றிக்கொண்டுதான் இருந்தார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இதிலும் சரிபாதியாக, அதாவது 15 தொகுதிகள் தருவதாக ராகுலிடம் தெரிவித்திருக்கிறார்.

“தொகுதி பங்கீடு விஷயத்தை அவனியாபுரத்தில் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம். நீங்கள் வாருங்கள்” என்று ராகுல்காந்தி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தேசிய கட்சியின் தலைவர் அழைக்கிறார் என்றதால், ஸ்டாலினும் அப்போதைக்கு ஒப்புக்கொண்டு விட்டார் என்கிறார்கள். அதேநேரம், மதுரைக்கு சென்றால் ராகுல் நம்மிடம் சாதுர்யமாக பேசி இன்னும் 5 அல்லது 10 சீட்டுகளை வாங்கி விடுவார் என்று ஸ்டாலின் கருதியுள்ளார்.

அதன் காரணமாகவே ராகுல் விடுத்த அழைப்பை நிராகரித்து ஸ்டாலின் அவனியாபுரம் செல்லவில்லை என்று தெரிகிறது. அதற்கு பதிலாக தனது மகன் உதயநிதியை அங்கு அனுப்பி வைத்தார். இதை ராகுல் காந்தி சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
உதயநிதியை பார்த்ததுமே அவருடைய முகம் வாடி வதங்கிப் போனது. ஜல்லிக்கட்டை பார்த்துக் கொண்டிருக்கையில் ராகுல் காந்தியிடம் உதயநிதி, “அப்பா உங்களிடம் சீட் பற்றி பேசும்படி கூறியிருக்கிறார்” என்று மெதுவாக காய் நகர்த்தி இருக்கிறார்.

ஏற்கனவே ஸ்டாலின் வராததால் ஆத்திரத்தில் இருந்த ராகுல் காந்தி அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார் என்கிறார்கள். உண்மையில் அன்று ஸ்டாலின் அவனியாபுரம் வந்திருந்தால் அவருடன் அமர்ந்து மேலும் ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்திருப்பாராம், ராகுல்.

ஆனால் மூடு அவுட் ஆனதால் அங்கிருந்து அரை மணி நேரத்திலேயே மதுரைக்கு திரும்பி மதிய உணவருந்திவிட்டு தனி விமானத்தில் மீண்டும் டெல்லிக்கு பறந்துவிட்டார். ஏற்கனவே வகுத்த திட்டத்தின்படி ராகுல்- ஸ்டாலின் சந்திப்பு நடந்திருந்து 20 தொகுதிகள் தந்தால் கூட ராகுல் சம்மதித்து இருப்பார் என்கிறார்கள்.

ஆனால் திட்டமிட்டு தன்னை சந்திப்பதைத் தவிர்த்து, மகனையும் அனுப்பி அவமானப் படுத்திவிட்டார் என்று ஸ்டாலின் மீது ராகுல்காந்திக்கு கடும் கோபம். இப்பிரச்சனையின் வேகம் தணிவதற்குள் காங்கிரசுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த 18-ம் தேதி புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் எம்பி, “புதுவையில் திமுக 30 இடங்களிலும் போட்டியிட்டு வெற்றிபெறும். அதை சொல்வதற்காகத்தான் என்னை தளபதி இங்கே அனுப்பி இருக்கிறார்” என்று தடாலடியாக அறிவித்தார். அதாவது மதுரையில் தனது கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரான உதயநிதியை ராகுல்காந்தி அவமதித்து விட்டதாக கருதி தனது கட்சி மேலிட உத்தரவு காரணமாக ஜெகத்ரட்சகன் இப்படி காங்கிரசுக்கு அதிர்ச்சி
அளிக்கும் விதமாக பேசினார் என்கிறார்கள்.

இது இரு கட்சிகளுக்கும் இடையேயான உரசலை மேலும் கொம்பு சீவி விடுவதாக அமைந்து விட்டது. ஆனாலும் காங்கிரஸ் நம்மை விட்டு எங்கேயும் போய்விடாது என்று கருதும் திமுக, இப்போது ஒரு புதிய திட்டத்தை காங்கிரசின் மேலிட பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது.

அதில், “தமிழகத்தில் காங்கிரசுக்கு 20 தொகுதிகள் தருகிறோம். ஆனால் புதுச்சேரியில் எங்களது தலைமையில்தான் கூட்டணி அமையவேண்டும்” என்று கறார் நிபந்தனையை விதித்துள்ளது. இது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது என காங்கிரஸ் கருதுகிறது.

சிங்கம் படுத்துவிட்டால் சிறு நரியும் கூட அதன் மீது ஏறி மிதிக்கும் என்பார்கள். அதுபோல நம்மை திமுக ஏளனமாக பார்க்கிறது என்று கருதும் காங்கிரஸ், இனி கூட்டணி பேச்சுவார்த்தை என்றால் திமுகவிடம் பணிந்து போய் விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறதாம்.

இந்த நிலையில்தான் ராகுல் காந்தி காந்தி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில் பிரச்சாரத்தில் ராகுல் என்ன பேசப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ராகுல்காந்தி பாய்வாரா? பதுங்குவாரா? என்பதற்கு இன்று விடை கிடைக்கும் என்று நம்பலாம்.

Views: - 0

0

0