திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார் ராஜேந்திர பாலாஜி… சிறைத்துறை நிர்வாகத்தின் அறிவிப்பை தொடர்ந்து நடவடிக்கை..!!

Author: Babu Lakshmanan
6 January 2022, 3:57 pm
Quick Share

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி, சுமார் மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார்.

தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து நேற்று இரவு விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, இன்று காலை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மதுரை சிறையில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திரபாலாஜியை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டார். வரும் வழியில் மதிய உணவை முடித்து விட்டு சுமார் 3 .15 மணி அளவில் காவல்துறை வாகனம் சிறை வளாகத்தில் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து
திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Views: - 319

0

0