7 பேர் விடுதலையை அரசியல் கட்சிகள் கோரக்கூடாது : காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு.. அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..!!

7 November 2020, 1:14 pm
Rajiv-Gandhi-assassination-case - congress - - updatenews360
Quick Share

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலையை அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையதல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

TN Governor- Updatenews360

2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருவதால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆளுநர் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. தற்போது, தமிழக அரசின் சார்பிலும் ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் 7 பேரின் விடுதலையில் ஆளுநர் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், 7 பேரின் விடுதலையை அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையதல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Nellai KS Alagiri Byte - updatenews360

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முன்னாள்‌ பிரதமர்‌ ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்‌ தான்‌ முடிவு செய்ய வேண்டும்‌. அவர்களை விடுவித்தால்‌ சிறைச்‌ சாலைகளில்‌ 25 ஆண்டுகளுக்கும்‌ மேலாக இருக்கும்‌ அனைத்து தமிழ்‌ கொலை குற்றவாளிகளையும்‌ விடுதலை செய்ய வேண்டும்‌ என்ற கோரிக்கை எழும்‌.

7 பேர்‌ விடுதலையை நீதிமன்றம்‌ அறிவித்தால்‌ ஏற்றுக்‌ கொள்வோம்‌. ஆனால்‌, அரசியல்‌ கட்சியினர்‌ அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம்‌ செய்தவர்களை குற்றவாளிகள்‌ என்றுதான்‌ கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள்‌ என்று அழைப்பது சரியல்ல.

பெருமதிப்பிற்குரிய அப்துல்‌ கலாம்‌, பெருந்தலைவர்‌ காமராஜர்‌, பேரறிஞர்‌ அண்ணா, கலைஞர்‌ கருணாநிதி, தோழர்‌ ஜீவானந்தம்‌, கணிதமேதை ராமானுஜம்‌ போன்றவர்களை தமிழர்கள்‌ என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும்‌ என்று ஒரு இயக்கம்‌ ஆரம்பித்தால்‌ தமிழகத்தில்‌ காவல்‌ நிலையங்கள்‌ வேண்டாம்‌, நீதிமன்றங்கள்‌ வேண்டாம்‌, சட்டம்‌ ஒழுங்கைப்‌ பற்றி பேச வேண்டாம்‌ என்பது பொருளாகும்‌.

எனவே, முன்னாள்‌ பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர்‌ பண்பாடு ஆகாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

7 பேரின் விடுதலைக்காக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் காங்கிரஸின் அறிவிப்பு, ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமா..? என் அச்சம் திமுக கூட்டணி கட்சியினருக்கு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 22

0

0