மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் திமுகவுக்கு வாய்ப்பு : கூட்டணியை தக்கவைக்க காங்., முயற்சி

9 September 2020, 8:30 pm
stalin-rahul- updatenews360
Quick Share

சென்னை: மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவிக்கு திமுகவை காங்கிரஸ் முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது திமுகவை கூட்டணியில் தக்க வைக்கும் உத்தி என்று பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பில்லை என்ற நிலையில், காங்கிரசின் கோரிக்கையை ஏற்று திருச்சி சிவாவை திமுக நிறுத்தியுள்ளது.

ஏற்கனவே இருந்த, ஹரிவன்ஷ் நாராயண்சிங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும், அடுத்த வாரம் கூடவுள்ளன. கூட்டத்தொடரின்போது மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண்சிங், தற்போது மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளதாலும், பீகார் சட்டசபைத் தேர்தல் வரப்போவதாலும், அவரையே மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணி வேட்பாளராக, பாஜக நிறுத்தலாம் என தெரிகிறது. ஹரிவன்ஷ் நாராயண்சிங்கிற்கு போட்டியாக, பிற கட்சிகளுடன் ஆலோசித்து, பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, அவை அலுவல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த காங்கிரசின் ஆலோசனைக் கூட்டம், நேற்று டெல்லியில் நடந்தது. ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக நடந்த இந்த ஆலோசனையில் கூட்டணிக் கட்சியான திமுக வேட்பாளரை எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் குலாம் நபி ஆசாத் விரைவில் திமுக தலைவர்களை சந்திக்கலாம் என்று தெரிகிறது.

தற்போது, மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரும்பான்மையுள்ள நிலையில், எதிர்க்கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் ஏனைய மாநிலங்களில் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள், அதை ஆதரிக்க முன்வராது. திமுகவை அந்தக் கட்சிகள் ஆதரித்தால் கடும் போட்டியை ஏற்படுத்தலாம். சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் பாஜகவுக்கு எதிராகத் திரட்டலாம் என்றும் காங்கிரஸ் திட்டமிடுவதாகத் தெரிகிறது. திமுக முக்கிய மாநிலக் கட்சிகளை காங்கிரஸ் கூட்டணியில் தக்கவைக்கவும் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தல் பயன்படும் என்று அக்கட்சி கருதுவதாகத் தெரிகிறது.

Views: - 8

0

0