புதுச்சேரிய பார்த்து கத்துக்கோங்க… மழையால் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்குக : ராமதாஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
23 November 2021, 5:47 pm
Quick Share

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறந்து கிடக்கும் விலங்குகளை பாதுகாப்பாக ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் அடித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும். இவற்றின் மூலம் கடலூர் மாவட்ட மக்களை நோய்ப் பரவலில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, விழுப்புரம், ஒருங்கிணைந்த வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, காவிரி பாசன மாவட்டங்கள், திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு மட்டும் தான் பற்றாக்குறையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு குறைந்தது ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் எதுவுமில்லை.

அண்டை மாநிலமான புதுச்சேரியில், தமிழகத்தை ஒப்பிடும் போது, மழை வெள்ள பாதிப்பு குறைவு தான். ஆனால், அந்த மாநிலத்தில் மஞ்சள் குடும்ப அட்டை, சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, அதாவது அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 216

0

0