மணிகண்டன் மரணமடைந்தது எப்படி..? வெளியானது காவல்நிலையத்தின் சிசிடிவி காட்சி.. உறவினர்கள் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
6 December 2021, 12:10 pm
Quick Share

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த நிலையில், காவல்நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேலதூவல் கிராமம் அருகே கீழத்தூவல் காவல் நிலைய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் நிறுத்த சொல்லியதாக சொல்லப்படுகிறது. இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் மாணவனைப் பின்தொடர்ந்து விரட்டிப்பிடித்து, மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

காவல்துறையினர், மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய மணிகண்டன் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மணிகண்டன் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், மணிகண்டனின் சகோதரர் அலெக்ஸ் பாண்டியன், ‘வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கீழத்தூவல் காவல் ஆய்வாளர் லட்சுமி ,எஸ்பி தனிப்பிரிவு போலீசார் ஐயப்பன், காவலர்கள் செந்தில், பிரேம்குமார், லட்சுமணன், கற்பகம் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்’ என புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, போலீசார் தாக்கியதால் மணிகண்டன் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு வரும் நிலையில், மாணவனின் சாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் #JusticeForManikandan என்று ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மணிகண்டன் காவல்நிலையத்தில் வைத்திருக்கும் போதும், அவரை உறவினர்கள் சென்று அழைத்து வந்தது தொடர்பான காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 338

0

0