அன்று ஜெயராஜ், பென்னிக்ஸ்… இன்று மணிகண்டன் : தொடரும் போலீஸ் கஸ்டடி மரணங்கள்… நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்..? டிரெண்டிங்கில் #JusticeForManikandan!!

Author: Babu Lakshmanan
6 December 2021, 11:20 am
Quick Share

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேலதூவல் கிராமம் அருகே கீழத்தூவல் காவல் நிலைய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் நிறுத்த சொல்லியதாக சொல்லப்படுகிறது. இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் மாணவனைப் பின்தொடர்ந்து விரட்டிப்பிடித்து, மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

காவல்துறையினர், மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய மணிகண்டன் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுகிறது.

இறந்த மாணவரின் உறவினர்கள் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டியுள்ளனர்.மேலும் காவல்துறையினர் தரப்பில் இருந்து பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்த அவரது உறவினர்கள், கிராமத்தினர் அரசு மருத்துவமனை வாயிலில் முதுகுளத்தூர்- பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மணிகண்டனின் தம்பி அலெக்ஸ் பாண்டியன், ‘வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கீழத்தூவல் காவல் ஆய்வாளர் லட்சுமி ,எஸ்பி தனிப்பிரிவு போலீசார் ஐயப்பன், காவலர்கள் செந்தில், பிரேம்குமார், லட்சுமணன், கற்பகம் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்’ என புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், “விவசாயத்திற்கு உரம் வாங்குவதாகச் சென்ற போது, வாகன சோதனை செய்து கொண்டிருந்த போலீசார் மணிகண்டனின் வாகனத்தை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், நிறுத்தாமல் சென்ற அவரை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். இதையடுத்து, அடித்தே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், எனது தாயுக்கு போன் செய்த போலீசார், உடனே ஆட்டோ எடுத்து வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு கூறினர். விஷயம் அறிந்து சென்ற போது, அவசரஅவசரமாக மணிகண்டனை ஸ்டேஷனில் இருந்து அழைத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

என் அம்மாவிடம் இரும்பு கட்டையால் ஆண் உறுப்பில் தாக்கியதாக அண்ணன் மணிகண்டன் அழுது கொண்டே கூறினார். அப்போதே, நடக்க முடியாத நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறவில் உயிரிழந்தார். அண்ணனின் உயிரிழப்பிற்கு காரணமாக காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனிடையே, ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை மற்றும் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மணிகண்டன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆட்சியின் போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்திற்கு குரல் கொடுத்த திமுக, தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் நடந்த மணிகண்டனின் சம்பவத்தில் மவுனம் காப்பது ஏன்..? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் #JusticeForManikandan என்று ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 224

0

0