சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு…??

Author: Udhayakumar Raman
2 June 2021, 11:37 pm
Quick Share

டெல்லி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்களை உள்ளடக்கிய வளாகமாகும். இந்திய ஜனநாயகத்தின் மையப்புள்ளியாக இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. சரித்திர மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடம் இந்தியாவின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. மேலும், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது மத்திய செயலகங்கள் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடக்க இருக்கின்றன.

இந்த நிலையில், கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ஆயிரக்கணக்கான கோடி செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் அத்தியாவசியமான ஒன்றல்ல என்றும், கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் குடிமக்கள் நலன் கருதி, சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை 31ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியதோடு, கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருப்பதாலும், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதாலும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க எந்தக் காரணமும் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த மனு உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டதாக கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததும் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 108

0

0