பத்திரிக்கையாளர்களை தாக்கிய CM ஸ்டாலினின் பாதுகாவலர்கள்… செய்தி சேகரிக்கச் சென்ற போது நிகழ்ந்த அட்டூழியம்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
31 May 2022, 1:02 pm
Quick Share

திருக்கடையூரில் ஆய்வு செய்த முதலமைச்சர் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனந்தமங்கலம், திருக்கடையூர், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி நெல் விதைப்பு மற்றும் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள், இயந்திர குறுவை நடவு ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு நடைபெற்ற பணிகள் குறித்து புகைப்பட கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அவர் ஆய்வு செய்வதை செய்தி சேகரிக்க மாவட்ட அளவிலான தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு தடை செய்யும் விதத்தில் நைலான் கயிறு கொண்டு காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். மேலும், முதல்வருடன் வந்திருக்கும் ஊடகத்துறையினர் செய்திகளை எடுத்து சென்னையில் உள்ள செய்தி விளம்பரத்துறை மூலம் அனுப்பி விடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை புகைப்படம் எடுக்க முயன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தடுத்தனர். மீறி படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக் கூறி அடையாள அட்டையை காண்பித்த பிறகு, அவர்களின் நெஞ்சின் மீது கையை வைத்து தள்ளி விட்டதாக பாதிக்கப்பட்ட நிரூபர்கள் கூறுகின்றனர்.

மேலும், திமுகவினர் உள்ளே செல்லும் பொழுது எங்களுக்கு இடம் இல்லையா..? என்று கூறி பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது அவரின் பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

Views: - 727

0

0