ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க காரணம் PFI-யா..? அப்படினா…? தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
29 September 2022, 7:36 pm
Quick Share

பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கக் காரணம் என்ன..? என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்தியா முழுவதும்‌, கேரளம்‌ முதல்‌ ஜம்மு காஷ்மீர்‌ வரை அனைத்து மாநிலங்களிலும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ நடத்தப்படும்‌, இந்த ஆர்‌எஸ்‌எஸ்‌ ஊர்வலம்‌, நம்‌ தமிழகத்திலும்‌ கருணாநிதி அவர்கள்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌, அரசு அனுமதியுடன்‌ ஆர்‌எஸ்‌எஸ்‌ சீருடையுடன்‌, ஒழுங்குடன்‌, கட்டுப்பாட்டுடன்‌, இசை வாத்தியங்கள்‌ முழங்க நடைபெறுவது வழக்கம்‌.

தமிழ்நாடு முழுவதும்‌ பல்வேறு முக்கியமான அணிவகுப்பு ஊர்வலம்‌ நடத்த அனுமதி கோரிய வழக்கில்‌, ஆர்‌.எஸ்‌.எஸ்‌ அமைப்பிற்கு ஊர்வலம்‌ நடத்த அனுமதி வழங்க வேண்டும்‌ என்று தமிழத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது. ஆனால்‌, அக்டோபர்‌ 2ஆம்‌ தேதி, ஆர்‌எஸ்‌எஸ்‌ திட்டமிட்டுள்ள ஊர்வலம்‌ நடத்த தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டத்திலும்‌ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும்‌ நடைபெறும்‌ ஒரு பாரம்பரியம்‌ மிக்க ஆர்‌.எஸ்‌.எஸ்‌ ஊர்வலத்தை
தமிழகத்தில்‌ மட்டும்‌ தடுக்கக்‌ காரணம்‌ என்ன?, தமிழகத்தில்‌ மாற்றுக்‌ கட்சியினருக்கும்‌, எதிர்க்கட்சியினரும்‌, தங்கள்‌ கருத்துக்களை எடுத்துச்‌ சொல்ல உரிமை மறுக்கப்படுகிறதா? உங்கள்‌ கொள்கைகளுக்கு ஒத்துவராதவர்களை ஒதுக்குவதற்கு, ஆட்சி அதிகாரத்தை தவறாகப்‌ பயன்படுத்துவீர்களா?

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பொது அமைதிக்குக்‌ குந்தகம்‌ விளைவிக்காத வகையில்‌, பொதுக்‌ கூட்டங்களை நடத்துவதற்கும்‌, ஊர்வலங்களை நடத்துவதற்கும்‌, ஒவ்வொரு குடிமகனுக்கும்‌ சட்டத்தில்‌ சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை பொதுக்‌ கூட்டத்தையும்‌ ஊர்வலத்தையும்‌ கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாமே தவிர அனுமதி மறுக்க, காவல்துறைக்கு அதிகாரம்‌ இல்லை.

உயர்நீதிமன்றம்‌, “ஆர்‌எஸ்‌எஸ்‌” அமைப்பிற்கு ஊர்வலம்‌ நடத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில்‌, அதன்‌ தீர்ப்பை அவமதித்து, தமிழக காவல்துறை ஆர்‌.எஸ்‌.எஸ்‌ ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஊர்வலம்‌ நடத்த விண்ணப்பித்திருந்த ஆர்‌எஸ்‌எஸ்‌ அமைப்புக்கு காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில்‌ கீழ்கண்டவாறு காவல்துறையினர்‌ தெரிவித்துள்ளனர்‌. மத்திய அரசு, பாப்புலர்‌ ப்ரண்ட்‌ ஆஃப்‌ இந்தியா இயக்கத்தை தடை செய்துள்ளதால்‌, பல இடங்களில்‌ போராட்டம்‌ நடத்தி வருகின்றனர்‌. தொடர்‌ வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள்‌ தொடர்பாக, மாநிலம்‌ முழுவதும்‌ ஓர்‌ அசாதாரண சூழல்‌ நிலவி வருகிறது. இந்தச்‌ சூழலில்‌, ஆர்‌எஸ்‌எஸ்‌ அமைப்பு பேரணி நடத்தினால்‌, அதில்‌ அசம்பாவிதங்கள்‌ எதுவும்‌ நிகழ வாய்ப்பு இருப்பதாகவும்‌, ஆகையால்‌ தமிழகத்தில்‌, சட்டம்‌ ஒழுங்கு
பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்‌, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பேரணிக்குத்‌ தடை விதிக்கப்படுவதாகவும்‌, காவல்துறையின்‌ கடிதத்தில்‌
விளக்கம்‌ அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின்‌ கடிதம்‌ அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. அக்கடிதத்தின்‌ தகவல்‌
உண்மையெனில்‌, பாப்புலர்‌ ஃப்ரண்ட்‌ ஆஃப்‌ இந்தியா அமைப்பினர்‌ வன்முறை நடத்தும்‌
அளவிற்கு தமிழகத்தில்‌ இன்னும்‌ உறுதியாக இருக்கிறார்களா? அப்படி என்றால்‌ காவல்துறை, தமிழகத்தில்‌ சட்டம்‌ ஒழுங்கு கெட்டு இருப்பதை ஒத்துக்‌ கொள்கிறதா? அல்லது, சட்டம்‌ ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? மாநிலம்‌ காவல்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ இல்லை என உணர்கிறதா?

பிஎ..ப்ஐதான்‌ காரணம்‌ என்றால்‌ பிஎ..ப்ஐ அமைப்பினர்‌ உறுதியாக இருக்கும்‌ கேரள
மாநிலத்தில்‌ ஆர்‌எஸ்‌எஸ்‌ ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும்‌ ஒழுங்குடன்‌, அமைதியுடன்‌, கண்ணியத்துடன்‌, கட்டுப்பாட்டுடன்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ நடத்தப்படும்‌, ஆர்‌எஸ்‌எஸ்‌ ஊர்வலம்‌, இந்த ஆண்டு மட்டும்‌ எப்படி சட்டம்‌-ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும்‌ என்று தமிழக காவல்துறை மட்டும்‌ நினைப்பது ஏன்‌?

Annamalai Plan - Updatenews360

தங்களால்‌ சட்டம்‌-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது என்று தமிழக அரசும்‌ காவல்துறையும்‌ அச்சப்படுகிறதா? நம்‌ அருகில்‌ உள்ள பாண்டிச்சேரியில்‌, காரைக்காலில்‌, ஆர்‌ எஸ்‌ எஸ்‌ ஊர்வலம்‌ தடை ஏதுமின்றி நடைபெறுகிறது. இன்னும்‌ கர்நாடகம்‌, ஆந்திரம்‌, கேரளம்‌, தெலுங்கானா என அனைத்து மாநிலங்களிலும்‌ நாடு முழுவதும்‌ நடத்தப்படுகிறது.

ஆகவே, ஆர்‌.எஸ்‌.எஸ்‌ அமைப்பிற்கு, ஊர்வலம்‌ நடத்த காவல்‌ துறையின்‌, முறையான
அனுமதி வழங்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்‌ என்று தமிழக பாஜக சார்பில்‌
கேட்டு கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 532

1

0