தமிழகத்தில் தொடங்கியது ஊரக உள்ளாட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு..!!

Author: Aarthi Sivakumar
6 October 2021, 8:41 am
Quick Share

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கியது.

முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 7,921 மையங்களில் 41,93,996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சித் தலைவர், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்பட 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம். ஒன்பது மாவட்டங்களிலும் வாக்குச்சீட்டு முறையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நான்கு வகையான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மஞ்சள், ஒன்றிய குழு உறுப்பினருக்கு பச்சை, ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்தில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிடுவதால் ஏழு முனை போட்டி நிலவுகிறது.

Views: - 479

0

0