சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா..? திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியா..? வலுக்கும் சந்தேகம்..!!

Author: Babu Lakshmanan
12 November 2022, 6:20 pm
Savukku Shankar - Updatenews360
Quick Share

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சவுக்கு சங்கர். கடந்த 2008-ஆம் ஆண்டு அதிகாரிகள் பேசி கொண்ட ஆடியோவை வெளியிட்ட விவகாரத்தில் சங்கர் கைது செய்யப்பட்டார். இதனால், சங்கரை பணியிடை நீக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இதனையடுத்து, சவுக்கு சங்கர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து, செப்டம்பர் 15ஆம் தேதி, அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக இரண்டு வழக்குகளும், 2021-ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகளும், சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இருந்த போதே, எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்படாத நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை வலுத்துள்ளது.

சவுக்கு சங்கர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடுத்தடுத்து வழக்கு போடுவதாக அவரது தாயார் குற்றம்சாட்டியிருந்தார். சவுக்கு சங்கர் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோன்று செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது குண்டர் சட்டம் போட கூட வாய்ப்பிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Views: - 255

0

0