அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க சதித்திட்டம்… அதிகாரிகள் தவறு செய்தால் அவ்வளவுதான்… எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!!

Author: Babu Lakshmanan
21 February 2022, 6:12 pm
Quick Share

சேலம் : அதிகாரிகள் தவறு செய்தால் அ.தி.மு.க சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தார். குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுப்பது தவறா? இதை தமிழக முதல்வர் தவறு என்று கூறுகிறாரா? முதல்வர் வெளியிட்ட செய்தி கண்டனத்துக்குரியது நாட்டின் முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவசியம். கடந்த ஒன்பது மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் தோல்வியுற்றதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிகாரிகள் தவறு செய்தால் அ.தி.மு.க சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம் என்றும் எச்சரித்தார்.

கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு பிரச்சனை நீடித்து வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் தங்கி இருந்து வன்முறையை தூண்டி வருகிறார். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. ஆனால் தி.மு.க ஆட்சியில் தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்து கொண்டு தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முயற்சிக்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் கையில் உள்ளது; தேர்தல் ஆணையம், காவல்துறை சுயமாக செயல்படவில்லை, என்று குற்றம் சாட்டினார்.

குற்றவாளியை கண்டறிந்து பிடித்து கொடுத்த ஜெயக்குமாருக்கு தண்டனையா? என்று கேள்வி எழுப்பிய அவர், நாளை வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும் என்றும், எந்த கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றாலும் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு அறிவிக்க வேண்டும், என்றும் கூறினார்.

Views: - 1032

0

0