சரத் – ராதிகா பின்வாங்கியது ஏன்? கோவில்பட்டி மர்மம் அம்பலம்!!

Author: Babu Lakshmanan
16 March 2021, 8:31 pm
Sarath - ttv - updatenews360
Quick Share

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில நேரங்களில் அது பெரும் காமெடியாகவும் மாறி விடும். அப்படி ஒரு நகைச்சுவை காட்சியைத்தான், திரையுலக தம்பதிகளான சரத்குமாரும், ராதிகாவும் தமிழக அரசியல் மேடையில் தற்போது அரங்கேற்றி இருக்கிறார்கள்.

கடந்தமாத முதல் வாரம் வரை, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி திடீரென்று, “எங்கள் கட்சி முன்பை விட வலிமையாக உள்ளது. எனவே இனிமேல் ஓரிரு தொகுதிகளுக்காக அதிமுகவிடம் கையேந்திக் கொண்டிருக்க மாட்டோம். இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட மாட்டோம். தனித் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” என்று திடீரென ஒரு புதிய நிபந்தனையை வைத்தார்.

sarathkumar - updatenews360

அவருடைய மனைவியும் சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளருமான நடிகை ராதிகா இன்னும் ஒருபடி மேலே போய், “என் கணவருக்கு முதல்வர் ஆவதற்கு எல்லாத் தகுதிகளும் இருக்கிறது. நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை
கொடுக்காவிட்டால் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு எங்களுடைய பலத்தை காட்டுவோம்” என்று முழங்கினார்.

இதை இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக கருதிய அதிமுக அவர்களை கண்டு கொள்ளவே இல்லை.

இதனால் சரத்குமாரும், ராதிகாவும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போய் விட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படியொரு அதிரடி காட்டி கூட்டணி கதவை அடைப்பார் என்பதை அவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை.
இதனால் வேறு கூட்டணி கிடைக்குமா? என்று தேடினர்

இதைத்தொடர்ந்து இருவரும் சசிகலாவை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதுபோல் டிடிவி தினகரனின் அமமுகவிடம் கூட்டணி அமைக்க பேரம் பேசினர்.

ttv dinakaran - updatenews360

ஆனால் சரத்குமார் போலவே முதல்வர் கனவில் மிதக்கும் டிடிவி தினகரன், “உங்கள் இருவருக்காக மட்டும் கூட்டணி அமைப்பதெல்லாம் சரிவராது. உங்களுக்கு தொகுதிகளையும் அள்ளித் தர மாட்டேன். அதேநேரம் நீங்கள் விரும்பினால் எனக்காக ஒரு உதவி செய்ய முடியும். அதை பிறகு சொல்கிறேன் ” என்று பூடகமாக பேசி சரத்குமாரையும், ராதிகாவையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அவர்களும் ஒருவழியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து விட்டனர். அங்கு போன பிறகும் கமல் கட்சியையும், தினகரன் கட்சியையும் ஒரே அணியாக மாற்ற சரத்குமார் முயற்சித்தார். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் எழுந்ததால் அது நடக்கவில்லை.

இதனை அடுத்தே சரத்குமார் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்ற செய்தி பரபரப்பாக வெளியானது. இதை சமத்துவ மக்கள் கட்சியும் மறுக்கவில்லை. சரத்குமார் சார்ந்த நாடார் வகுப்பினர் கோவில்பட்டி தொகுதியில் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் கோவில்பட்டியில் அவர் போட்டியிடுவது உறுதி என்ற தகவலும் வேகமாக பரவியது.

பின்னர் அந்த வேகம் அடங்கியபோது, சரத்குமாரின் மனைவி ராதிகா சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கோவில்பட்டியில் நிறுத்தப்படுவார் என்ற தகவல் வெளியானது.பின்பு அதுவும் நீர்த்துப் போனது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் கோவில்பட்டியில் போட்டி என்ற பேச்சையே எடுக்கவில்லை.

மாறாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்புதான் திடீரென வந்தது. அதுவும், யாருமே எதிர்பாராத வகையில் அவர் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே 2017 இடைத்தேர்தலில் தான் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்த தினகரன் ஏன் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்தார், ஆர்.கே. நகரில் திரும்பவும் களம் இறங்கியிருந்தால் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பாரே, அந்த அரிய வாய்ப்பை நழுவ விட்டு கோவில்பட்டிக்கு எதற்காக வந்தார்? என்று கேள்வி எழுப்பாத அரசியல் ஆர்வலர்களே இல்லை எனலாம்.

இந்த நிகழ்வுகளையும் எல்லாம் ஒன்றாக இணைத்து பார்த்தால், அரசியலில் சரத்குமார்-தினகரன் இடையே ஒரு புரிதல் இருப்பது புலப்படும்.

Radika Sarath -Updatenews360

அதாவது டிடிவி தினகரன் போட்டியிடுவதற்கு வசதியாகத்தான் சரத்தும், ராதிகாவும் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கி விட்டனர் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.

கோவில்பட்டி தொகுதியில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் பெரும்பகுதி அடங்கி உள்ளது. இங்குள்ள ஜமீன்தார் மாணிக்கராஜா, டிடிவி தினகரனுக்கு நெருங்கிய நண்பர். அமமுகவின் தென்மண்டல செயலாளரும் ஆவார். கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் பெரும் தலைவராகவும் அவர் உள்ளார். மாணிக்கராஜாவையும் தொகுதியில் உள்ள 60 ஆயிரம் முக்குலத்தோர் ஓட்டுகளையும் முழுவதுமாக நம்பித்தான் கோவில்பட்டியில் தினகரன் களம் இறங்கி இருக்கிறார்.

அதிமுக சார்பில் மீண்டும் களம் இறங்கியுள்ள மண்ணின் மைந்தரான அமைச்சர் கடம்பூர் ராஜுவையும், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனையும் எளிதில் வீழ்த்தி விடலாம் என்று மனக்கோட்டையை கட்டியே தினகரன் கோவில்பட்டியில் களமிறங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இவர்களை மீறி வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரண காரியமல்ல என்பதை உணர்ந்துதான், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்பிய சரத்குமாரையும், ராதிகாவையும் தினகரன் பின்வாங்க வைத்து விட்டார் என்கிறார்கள்.

இந்த இருவரில் யாராவது ஒருவர் போட்டியிட்டாலும் ஓட்டுகள் பிரிந்து அது தனக்கு படுதோல்வியை கொடுத்துவிடும் என்று பயந்துதான், இவர்களை கோவில்பட்டியில் போட்டியிட விடாமல் தினகரன் தடுத்து விட்டார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதேநேரம் தானும், ராதிகாவும் தேர்தலில் போட்டியிடாதது குறித்து, நடிகர் சரத்குமார் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதிலும் நிறையவே காமெடி இருக்கிறது.

தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், “எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்ற மாதிரி. அவர்களின் வெற்றிக்காக முழுமையாக ஈடுபடவேண்டும். கடும் முயற்சியும் தேவை. அதற்காக நாங்கள் அறிவித்திருக்கிற முதல்வர் வேட்பாளராக கூட்டணியின் தலைவர் கமல்ஹாசனை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காக நானும் ராதிகாவும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறோம்”என்று விளக்கம் அளித்தார்.

சரத்குமாரும், ராதிகாவும் நடத்தும் அரசியல் நாடகம் வெகு ஜோராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதிலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது!

Views: - 260

0

0