சசிகலாவை நீக்கியது செல்லும்… குஷியில் எடப்பாடி பழனிசாமி… ஒற்றை தலைமையை நோக்கி நகருகிறதா அதிமுக..?

Author: Babu Lakshmanan
11 April 2022, 1:27 pm
Quick Share

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்க காத்திருந்த வேளையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து,டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

V K Sasikala leaves after attending the party's MLA's meeting

பின்னர், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தங்களை நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். மேலும், அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் சட்ட விரோதம் என உத்தரவிடக் கோரியும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

அதேவேளையில், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை, கட்சியும் சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி ஸ்ரீதேவி தவிர்க்க இயலாத காரணத்தால் விடுமுறை என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

OPS EPS -Updatenews360

இந்த நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் என கூறிய நீதிபதி, சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

sasikala 2- updatenews360

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, அண்மையில் அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளுக்கு ஒற்றை தலைமையின்மையே காரணம் என்று அதிமுகவினரிடையே பரபரப்பான பேச்சு அடிபட்டது. இருப்பினும், அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சசிகலா தடையாக இருந்து வந்தார்.

EPS - Updatenews360

தற்போது, அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்திருப்பது, ஓபிஎஸ், இபிஎஸ்க்கு புதிய உற்சாகத்தை உண்டாக்கியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

எனவே, கட்சி, ஆட்சி என இரண்டையும் பிரித்து அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி நகருமா..? என்ற எதிர்பார்ப்பு அதிமுக கட்சியினரிடையே எழுந்துள்ளது.

Views: - 720

0

0