மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சில அமைப்புகள் சசிகலா, தினகரன், ஓ பன்னீர்செல்வம் மூவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும் என்ற யோசனையை அண்மையில் தெரிவித்து இருந்தன.
இப்படிச் சொல்லி 6 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. என்றபோதிலும் இந்த மூவரிடம் இருந்தும் இது தொடர்பாக இந்நாள் வரை வெளிப்படையாக எந்த ரியாக்சனும் வெளிப்படவில்லை.
ஓபிஎஸ், சசிகலா ரகசிய சந்திப்பு?
அவர் இவரை சந்திப்பார், இவரை அவர் சந்திப்பார் என்று பொத்தாம் பொதுவாகத்தான் செய்திகள் வெளியாகிறதே தவிர வேறு எதுவும் உருப்படியாக நடந்த மாதிரி தெரியவில்லை.
அதேநேரம் ரகசிய சந்திப்புகள், மூவரிடையேயும் இரண்டு நாளைக்கு ஒரு தடவை நடக்கிறது, என்கிறார்கள். ஆனாலும் மூவரும் பொதுவெளியில் கைகோர்த்து செயல்படுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
இதற்கு முக்கிய காரணம் மூன்று பேரையும் பின்னால் இருந்து இயக்குபவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுவதுதான்.
ஆபரேஷன் எஸ்
தவிர பன்னீர்செல்வத்தின் பிளானோ வேறு மாதிரியாக உள்ளது என்கின்றனர்.
தனது ஆதரவாளர்கள் மூலம் அடுத்த மாதம் 15-ம் தேதி ஒரு போட்டி பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் அதைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் எஸ்’ என்கிற பெயரில் ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை தேனி நகரில் நடத்திக்காட்டவும் அவர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நாம் நினைப்பதுபோல் இந்த கூட்டம் அமைந்துவிட்டால் தனக்குப் பின்னால் சசிகலாவும், டிடிவி தினகரனும் தானாகவே ஓடி வந்து விடுவார்கள், அவர்களுக்கு கீழாக செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஒருபோதும் ஏற்படாது. தன்னால் கட்சியின் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ வாழ்நாளின் இறுதிவரை இருக்கலாம் என்று அவர் கணக்குப் போடுகிறாராம்.
ஆனால் சசிகலாவோ கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
ஓபிஎஸ் மீது சசிகலா கோபம்
காரணம், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியிடம் ஓபிஎஸ் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம்.
பதவி சுகத்திற்காக சுயமரியாதையை இதுவரை இழக்காத ஓபிஎஸ் இந்த விவகாரத்தில் மன தைரியத்தை இழந்து கோழைபோல் ஆகிவிட்டார் என்று சசிகலா தனக்கு நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக பேசப்படுகிறது.
அதனால் இன்னும் இரண்டு மாதம் கழித்து தன்னிடம் ஓபிஎஸ் வலிய வந்து, நான் தொடங்கவிருக்கும் புதிய கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுவார். அதுவரை நாம் பொறுத்திருப்போம் என்று சசிகலா அமைதி காக்கிறார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவலாக உள்ளது.
மாஸ்டர் பிளானில் டிடிவி
டிடிவி தினகரனின் சிந்தனையோ வேறு ரகம். தனது சித்தி சசிகலாவுக்கோ, ஓபிஎஸ்சுக்கோ தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சியை நடத்திய அனுபவம் கிடையாது.
தென்மாவட்டங்களில் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு ஆதரவும் இல்லை. நாமோ 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் நமது கட்சியின் செல்வாக்கை நிரூபித்து காட்டி இருக்கிறோம். மேலும் டெல்லி பாஜகவின் ஆதரவு வேறு நமக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் இருவரும் நம்மை தேடி வருவார்கள். அப்போது அமமுகவை கலைத்துவிட்டு மூவரும் தொடங்கும் புதிய கட்சியில் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என தினகரன் கணக்குப் போடுகிறார், என்கிறார்கள்.
சரி, அரசியல் விமர்சகர்கள் என்ன நினைக்கிறார்கள்?…
“உண்மையிலேயே ஓபிஎஸ் ஐகோர்ட் தனி நீதிபதியிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதையெல்லாம் சசிகலாவோ, தினகரனோ ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவருடைய சுபாவம் என்ன என்பது இருவருக்கும் நன்றாகவே தெரியும்.
ஓபிஎஸ் முதலில் சீறுவது போல போக்கு காட்டுவார். எதிர்த்து நின்றால் அடி பணிந்து போய் விடுவார். ஆனால் எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பதற்கு காரணம் 2021 தேர்தலில் கட்சியில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார்கள் என்று ஓபிஎஸ் மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன் காரணமாகத்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்திலும் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை.
ஓபிஎஸ்சை வெறுத்த அதிமுக தொண்டர்கள்
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் இன்னும் 20 தொகுதிகள் வரை அதிமுகவால் வெற்றி கண்டிருக்க முடியும். திமுகவும் தனி மெஜாரிட்டி பெற்றிருக்காது என்பது பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் எண்ணம்.
அதனால் திமுகவின் வெற்றிக்காக ஓபிஎஸ் மறைமுகமாக உதவியிருக்கிறார் என்ற சிந்தனை அப்போதே அதிமுக தொண்டர்களிடம் ஆழமாக பதிந்து போய்விட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஓபிஎஸ் வெளிப்படையாகவே திமுகவுக்கு ஆதரவாக பேச திமுக எதிர்ப்பு நிலையில் மட்டுமே வளர்ந்த அதிமுக தொண்டர்கள் அடியோடு அவரை வெறுக்க தொடங்கினர்.
திமுகவை வருடும் ஓபிஎஸ்
திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிக்கைகளில் எப்போதுமே காட்டம் நிறைந்திருக்கும். ஆனால் ஓபிஎஸ் வெளியிடும் அறிக்கைகள் திமுகவுக்கு வருடிக் கொடுப்பதுபோல மிக மென்மையாக பணிந்து வேண்டுகோள் வைப்பதுபோல் இருக்கும். இந்த வித்தியாசத்தை அதிமுக தொண்டர்கள் நன்றாக புரிந்து கொண்டால்தான் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அவர்கள் ஒன்றாகத் திரண்டு விட்டனர்.
அதுவும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி, முதலமைச்சர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதுடன் திமுக ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்த பின்பு அந்த வெறுப்பு ஓபிஎஸ் மீது இன்னும் அதிகமாகிப் போனது.
ஓபிஎஸ்சை இயக்கும் ஆடிட்டர்
தவிர 2017 முதலே ஒரு பிரபல ஆடிட்டர், தான் சொல்வதை மறுக்காமல் அப்படியே கேட்டு நடப்பதற்கு ஓபிஎஸ்சை பழக்கி விட்டார். இன்றளவும் ஓபிஎஸ்ஐ அவர்தான் இயக்குகிறார். ஓபிஎஸ் அடுத்தடுத்து கோர்ட் படி ஏறுவதற்கும் அந்த ஆடிட்டர்தான் உறுதுணையாக இருக்கிறார்.
அதே நேரம் அதிமுக பலவீனம் அடைந்தால் இன்னும் 10 வருடத்திற்கு நம் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று கணக்கு போடும் திமுகவும் அவருக்கு மறைமுகமாக உதவி செய்கிறது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை தேர்தலில் வெற்றி கொள்வது, கடினமான காரியமாக இருக்கும் என்று திமுக கருதுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
மேலும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை கட்சி அலுவலக கதவை காலால் எட்டி உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததுடன் அதை சூறையாடியதையும் அதிமுக மாவட்ட கட்சி அலுவலகங்களின் பத்திரங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு ஒரு வேனில் ஏற்றிச் சென்ற காட்சியையும் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் நேரடி ஒளிபரப்பானதை பார்த்து அதிமுக தொண்டர்கள் மனம் நொறுங்கிப் போனார்கள்.
ஓபிஎஸ்க்கு துணை போகும் திமுக?
அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, பிறகு ஐகோர்ட் உத்தரவுப்படி சாவி மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடமே ஒப்படைக்கப் பட்டுவிட்டாலும் கூட, காணாமல் போன முக்கிய ஆவணங்கள் குறித்து போலீசிடம் புகார் அளித்தும் அதைக் கொள்ளையடித்து சென்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திமுக அரசின் போலீசார் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக திணறிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனைக்கும் அந்த வேனின் நம்பர் பிளேட் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பளிச்சென்று தெரிந்த போதிலும் கூட முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டிலுள்ள போலீசார் ஏன் விசாரணை மேற்கொள்ளாமலும் நடவடிக்கை எடுக்காமலும் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை என்று அதிமுகவினர் மனம் குமுறுகிறார்கள்.
இதனால்தான் ஓபிஎஸ் மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற ஆழ்ந்த கவலை அதிமுகவின் அத்தனை தொண்டர்களிடமும் காணப்படுகிறது.
முடியவே முடியாது
திமுக, ஒரு ஆடிட்டர், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என ஐந்து தரப்பும் அதிமுகவை அடியோடு நிர்மூலமாக்க பார்க்கிறார்கள் என்பதையும் கட்சி தொண்டர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.
அதனால் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ஓபிஎஸ்சால் அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்த முடியாது. தன் பக்கம் இழுக்கவும் இயலாது.
இப்படி அடுத்தவர்களின் கட்டுப்பாட்டிலும், உதவியாலும் இயங்கிவரும் தான், சசிகலா தினகரன் பக்கம் போனாலும் அவர்களுக்கு கீழாகவே செயல்பட வேண்டி வரும், அங்கு காலப்போக்கில் மரியாதையும் கிடைக்காது என்ற பீதி, பயம் காரணமாகத்தான் அவர்கள் இருவரையும் சந்திப்பதற்கு ஓபிஎஸ் தயக்கம் காட்டி வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள்
காரணம் கூறுகின்றனர். இதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது!
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
This website uses cookies.