மாவட்ட அதிமுக அதிரடி தீர்மானம்… சுற்றி வளைத்து துரத்தியடிக்கப்படும் சசிகலா… விழிபிதுங்கும் அமமுக தினகரன்!!

19 June 2021, 11:28 am
sasikala - admk - updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா சிறைவாசம் முடிந்து, கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலையானார். அதற்கு முன்பாக கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானதாகக் கூறி பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.

சசிகலாவுக்கு ஏமாற்றம்

அவர் தமிழகம் திரும்பியதும், அரசியலில் பெரும் பிரளயமே ஏற்படும் என்று அமமுக பொதுச்செயலாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமான டிடிவி தினகரன் எதிர்பார்த்தார்.

sasikala 2- updatenews360

பிப்ரவரி 8-ந் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி வந்த அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தனக்கு கிடைத்த 23மணி நேர வரவேற்பால் திக்குமுக்காடிப் போன சசிகலா, தன்னை நம்பி கோடான கோடி தமிழக மக்கள் இருப்பதாக கருதிக் கொண்டார்.

ஆனால் சென்னை திரும்பிய பின் அவரைப் பார்ப்பதற்காக அதிமுகவிலிருந்து ஒருவர் கூட அவருடைய வீட்டு பக்கம் எட்டி பார்க்கவில்லை.

அதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள், தன்னைத் தேடி ஓடி வருவார்கள், சரணாகதி அடைவார்கள் என்று சசிகலா கணக்குப் போட்டார். அதுவும் பூஜ்யம் ஆகிப்போனது.

தினகரனுக்கு அதிர்ச்சி :

இந்த நிலையில்தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவருடைய முடிவுக்கு ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீங்கள் இப்படியொரு முடிவை எடுத்தது தவறு என்று அவரை யாரும் தடுக்கவும் இல்லை. மாறாக, நீங்கள் எடுத்தது அருமையான முடிவுதான் என்று மனதார வாழ்த்தியவர்களே அதிகம். அதனால் அரசியலில் சன்யாசம் வாங்குவதாக அவர் அறிவித்ததும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

sasikala - dinakaran - updatenews360

அதேநேரம், தேர்தலில் அதிமுகவின் ஓட்டுகளை, தனது அக்காள் மகன் கட்சி கணிசமாக பிரித்து அதிமுகவை அடியோடு வீழ்த்திவிடும். அதன் பிறகு எளிதாக அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்டார். ஆனால் அமமுகதான் படுகுழியில் விழுந்தது.

குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

இப்படி எதுவுமே தனக்கு சாதகமாக அமையாத நிலையில் மனம் நொந்துபோன சசிகலா தற்போது கடைசி முயற்சியாக, செல்போனில் அதிமுகவினரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ உரையாடல் பற்றிய தகவல்கள் தினமும் ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.

அதில் சசிகலாவுடன் பேசியவர்கள், “நீங்கள்தான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும், உடனடியாக வாருங்கள்” என்று அழைப்பு விடுப்பது போன்ற உரையாடல்களும் இடம்பெறுகின்றன.

“தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்கள். அதை நம்பித்தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால் விரைவில் கட்சிக்கு திரும்பி, கட்சியை சீரமைப்பேன்” என்று சசிகலா பேசுவது போலவும் சில ஆடியோக்கள் வெளியாகின.

எடப்பாடியாரின் அதிரடி :

சசிகலா இப்படி கூறிய நிலையில் அவருடன் போனில் பேசியதாக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 16 நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். மேலும் அண்மையில் நடந்த சட்டப்பேரவை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் “சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், சசிகலாவின் ஆடியோ வெளியிடு படலம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பைசா பிரயோஜனம் பெறாத அந்த ஆடியோ உரையாடல்கள் ஒருசில ஊடகங்களுக்கு நல்ல தீனியாக இருப்பதால், அதை குஷியோடு வெளியிட்டும் மகிழ்கின்றன.

இதனை முறியடிக்கும் விதமாகத்தான், தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

eps ops - updatenews360

அதில் “அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா தொலைபேசியில் சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். அதை வன்மையாக கண்டிக்கிறோம். சசிகலாவிடம் போனில் பேசிய அனைவரையும் அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்கியதையும் வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலாவால் ஜெ.,வுக்கு வீண்பழி :

விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாத சசிகலாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவில் இனி எப்போதுமே இடமில்லை. இந்த இயக்கத்தை எப்படியாவது அபகரித்து கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சசிகலா யார், யாருக்கோ தொலைபேசியில்
பேசி நாடகமாடி வருகிறார். எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்றும் சசிகலா கனவு காண்கிறார். அவருடைய கனவு ஒருபோதும் நனவாகாது. சசிகலா அடித்த கொள்ளையால்தான் வீண் பழியை ஏற்றுக்கொண்டு அம்மா ஜெயலலிதா அவர்கள் சிறைக்கு சென்றார். அம்மா அவர்களின் சாபம்தான் சசிகலாவை 4 வருடம் சிறையில் களி சாப்பிட வைத்தது. மன்னார்குடி குடும்பத்தை அதிமுகவில் நுழைய விடக்கூடாது. “என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

jayalalitha 2- updatenews360

சசிகலா பேசியதாக கூறப்படும் ஆடியோ உரையாடல்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2006 தேர்தலில் கூட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 69 இடங்களைத்தான் கைப்பற்றியது.

மேலும் சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து 1995-ல் நடத்திய பிரம்மாண்ட திருமணத்தால்தான் மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டு 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி கண்டது. அந்தத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவும் தோற்றுப்போனார். இந்த தோல்விக்கு முக்கிய காரணமே சசிகலா குடும்பம்தான்.
இந்த இரண்டு தேர்தல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியதை கௌரவமான தோல்வி என்றே சொல்லவேண்டும். எனவே எந்த வகையில் அதிமுக படுதோல்வி அடைந்துவிட்டது என்பதை சசிகலா விளக்கவேண்டும். ஒருவேளை, அவருடைய தலைமையில் அதிமுக 2021 தேர்தலை சந்தித்திருந்தால் 5 இடங்களில் கூட ஜெயித்து இருக்காது. ஏனென்றால் சசிகலா ஊழல்வாதி, சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்று பிரச்சாரம் செய்தே திமுக 225-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வாரிச் சுருட்டியிருக்கும்.

அசைக்க முடியாது

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவின் கதை வேகாததால் சசிகலா அதிமுகவில் இப்படி குழப்பத்தை உண்டு பண்ணப் பார்க்கிறார். இந்த ஆடியோ உரையாடல் நாடகம் நிச்சயம் டிடிவி தினகரனின் தயாரிப்பில் உருவானதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த விவகாரம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் நிறைவேற்றும் தீர்மானங்களால், பிசுபிசுத்துப் போய்விட்டது. போட்ட திட்டம் துளியும் கை கொடுக்காததால் தினகரனும் விழிபிதுங்கித்தான் போயிருக்கிறார்.

இப்போதும்கூட தன் கைக்கு வராத அதிமுக இருந்தால் என்ன? இல்லாமல் போனால்தான் என்ன? என்ற ஒரே நோக்கத்துடன்தான் சசிகலா செயல்பட்டு வருகிறார், என்றே கருதத் தோன்றுகிறது. அவர் அதிமுகவின் தலைமையை விரும்புவதை கைவிட்டு அமமுகவை பலப்படுத்த முயற்சிக்கலாம்” என்று அட்வைஸ் செய்தனர்.

சசிகலா ஆயிரம் ஆடியோ உரையாடல்களை வெளியிட்டாலும், டிடிவி தினகரன் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்பதே அக்கட்சி தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது!

Views: - 176

0

0