அரசியலுக்கு திடீர் முழுக்கு : ஒதுங்கினார் சசிகலா… அதிர்ச்சியில் ஸ்டாலின்!!
4 March 2021, 11:17 amதேர்தல் நேரத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்படுவது சர்வ சாதாரண விஷயம். சில நேரம் அது விஸ்வரூபம் எடுக்கும். பல நேரங்களில் அது நமத்துப் போன பட்டாசு போல, புஸ்’ ஆகிப் போவதும் உண்டு. இதில் இரண்டாவதாக கூறப்பட்ட போன்றதொரு திருப்பம்தான் நேற்றிரவு தமிழக அரசியலில் நிகழ்ந்தது.
ஆம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சித்தியான சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை திடீரென வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி எடுத்த ஒரு கருத்துக் கணிப்பில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஒரு சதவீத ஓட்டுதான் கிடைக்கும் என்ற தகவலை முன்கூட்டியே கேள்விப்பட்டதால்தான் இந்த முடிவுக்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது.
சசிகலாவின் அரசியல் முழுக்கு, அதிமுகவினர் முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் சற்று தாமதமாக, இப்போது நடந்துள்ளது. சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பால் இருவர் மட்டும் இரவில் நிம்மதியாக உறங்கி இருப்பார்களா? என்பது சந்தேகமே. அவர்கள் யார் என்பது சிதம்பர ரகசியம் அல்ல. சொல்லாமலேயே அனைவரும் அறிந்த ஒன்று.
இனி, விஷயத்துக்கு வருவோம்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா நான்காண்டு சிறைவாசம் முடிந்து சென்னை திரும்பியபோது, திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென பொங்கியெழுந்து, “இதோ அதிமுக கொடியுடன் காரில் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டு விட்டார். இனி, அதிமுகவில் நடப்பதை அவரே கவனித்துக்கொள்வார்” என்று ஆவேசமாகப் பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.
ஒருவேளை, சசிகலா சென்னைக்கு வந்த பின்பு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் அவர் பக்கம் ஓடிச் சென்று விடுவார்கள். ஆட்சி அடுத்த நிமிடமே கவிழ்ந்துவிடும். தனது 4 ஆண்டு கனவும் நனவாகி விடும் என்று கருதி ஸ்டாலின் இப்படி பேசி இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அவர் தன் மனதில் உள்ளதை அப்படியே வெளியே கொட்டியது திமுகவுக்கு பாதகமாகவே முடிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
அரசியலில் அமைதி,பொறுமை காக்க வேண்டும் என்பதை தனது தந்தை கருணாநிதியிடம் இருந்து எப்படி ஸ்டாலின் கற்றுக் கொள்ளாமல் போனார்? என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்களே கருத்து தெரிவிக்கும் அளவிற்கு அவருடைய பேச்சு அமைந்து இருந்தது. அதன் பிறகும் ஆட்சி கவிழவில்லை. என்றபோதிலும், ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறுகின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.
சசிகலா தொடர்ந்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார், அதனால் தேர்தலில் அதிமுக வாக்குகள் அப்படியே சிதறும், எளிதில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கணக்கு போட்டு இருந்ததாகவும், அதனால் சசிகலா வெளியிட்ட அறிவிப்பால் அதிகம் அதிர்ச்சியடைந்தது, அவர்தான் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.
அதேநேரம் இதுவரை அவரை பகடைக்காயாக பயன்படுத்திவந்த டிடிவி தினகரனுக்கும் பலத்த அடி கிடைத்துள்ளது, என்கின்றனர். சசிகலா சிறைக்கு சென்ற நாளிலிருந்தே, அவரை வைத்துத்தான் அரசியலில் ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்தார், தினகரன். இப்போது அதற்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக சசிகலா அரசியலிலிருந்து விலகியது பற்றி
தினகரன் கூறும்போது, “சசிகலாவுக்கு இதில் எந்த பின்னடைவும் கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அரசியலில் இருந்துவிலகிவிட்டார். அதிமுகவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என்பதன் காரணமாகவும் ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு செய்துவிட்டார்” என்று ஏதேதோ சாக்குபோக்கு கூறி சமாளிக்கிறார்.
உண்மையில் இதுபோன்றதொரு நெருக்கடியை சசிகலாவுக்கு ஏற்படுத்தியதே டிடிவி தினகரன்தான் என்கிறது, அரசியல் வட்டாரம்.
இதுபற்றி அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “அதிமுக என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கி வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம். அதை அப்படியே கட்டி காத்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
அம்மாவின் திடீர் மறைவுக்குப்பின், சசிகலா முதல்வராகவேண்டும் என்று தினகரன் மட்டுமே விரும்பினார். அப்போது இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான் தொடர்ந்து அப்பதவியில் நீடித்திருக்கவேண்டும். ஆனால் வேண்டுமென்றே சசிகலாவை முதல்வராக தினகரன் தேர்ந்தெடுக்க வைத்தார். அம்மாவின் தோழி என்பதால் வேறு வழியின்றி அந்த நேரத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். ஆனால், அவர் சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வரை தனது கைப்பாவையாக ஆட்டிப்படைக்க தினகரன் விரும்பியதுதான் அதிமுக தொண்டர்கள் அவர் மீது கோபம் கொள்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் தனி அணியாக செயல்பட்ட ஓ பன்னீர்செல்வம், முதல்வருடன் கைக்கோர்த்து ஆட்சியை இன்னும் வலுவாக்கியபோது, தினகரனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், புரட்சித்தலைவி அமைத்த அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்து தோல்வியே கண்டார். தனிக் கட்சியும் தொடங்கினார். இதற்காக சிறையில் இருந்த சசிகலாவின் பெயரை அவர் தவறாகவும் பயன்படுத்தினார்.
ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு எதார்த்த நிலை புரிந்தது. தன்னை சந்திக்க அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் திரண்டு வந்து வரவேற்பார்கள் என்று நினைத்திருந்த அவர் பெருத்த ஏமாற்றமும் அடைந்தார். மேலும், கட்சியும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்படுவதையும் அவர் உணரவும் செய்தார்.
பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி ஒருமாதம் ஆகிவிட்ட நிலையிலும், அவரால் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இதனால்தான் மனம் நொந்து அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அவர் அறிவித்திருக்கிறார் என கருதுகிறோம். அதேநேரம் இதில் தினகரனின் சூழ்ச்சியும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், தான் நினைத்தது நடக்காவிட்டால் அவர் எதையும் செய்யத் துணிவார்.
எனவே, அவர் தனது கட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொள்வது தான் நல்லது. அவர் தொடங்கிய கட்சிக்கு ஜாதி முத்திரை வேறு பதித்துவிட்டார். அதிமுக தொண்டர்கள் ஒரு போதும் ஜாதி, மத அரசியலை விரும்பியதில்லை. அதனால் தினகரனும் ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.
சசிகலா குடும்பத்தின் 32 பேர் அம்மாவின் போயஸ் தோட்ட இல்லத்தை ஆக்கிரமித்ததாலேயே புரட்சித்தலைவிக்கு பெரும் சோதனை ஏற்பட்டது. அவர் சிறை செல்லவும் நேரிட்டது. இது அவர் விரைவிலேயே மரணம் அடைய காரணமாகவும் அமைந்தது. எனவே அம்மா அவர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று டிடிவி தினகரன் விரும்பினால், சசிகலா அறிவித்ததுபோல் அவர் தனது கட்சியை கலைத்துவிட்டு அரசியலிலிருந்து அடியோடு ஒதுங்கவேண்டும்.
ஒருவேளை, அரசியலில் நீடிக்க தினகரன் விரும்பினால் தங்க தமிழ்ச்செல்வனும், செந்தில் பாலாஜியும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டதுபோல் அமமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம். ஏனென்றால், மறைமுகமாக திமுக ஆட்சிக்கு வருவதைத்தான் தினகரன் விரும்புகிறார்”, என்று சற்று விரிவாகவே விளக்கமளித்தனர், அந்த நிர்வாகிகள்.
தேர்தல் நடப்பதற்குள் தமிழக அரசியலில் என்னென்ன திடீர் திருப்பங்கள் ஏற்படப் போகிறதோ தெரியவில்லை!
0
0