பள்ளியில் மேசைகளை சூறையாடிய மாணவர்கள்… வைரலான ஷாக் வீடியோ… பள்ளிக்கல்வித்துறை உடனே எடுத்த ஆக்ஷன்..!! (வீடியோ)
Author: Babu Lakshmanan25 April 2022, 4:29 pm
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முடிந்து செல்லும் முன்பாக வகுப்பறையில் உள்ள மேசைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்க உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளி விடப்பட்டுள்ளது.
ஆனால் 12-ம் வகுப்பு C பிரிவை சேர்ந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் வந்து வீட்டுக்கு செல்லும் படி அறிவுறுத்தியும், அதை சற்றும் பொருட்படுத்திடாத மாணவர்கள் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை உடைத்தெரிந்துள்ளனர்.
பின்னர் பாகாயம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த காவலர்களை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்கள் அரங்கேறி வருவது வருங்களா இளய சமுதாயத்தின் மீது கேள்விக்குறியை எழுப்புகிறது. மேலும் இதற்கு முதல்படியாக பெற்றோர்கள் மாணவர்களை கண்காணிப்பானது இன்றை கால கட்டத்தில் முதல் கட்டாயமாகவும், ஆசிரியர்களுக்கு தகுந்த சுதந்திரம் அளிப்பது இரண்டாம் கட்டாயமாகவும் உள்ளதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் ஆசிரியர்களை மாணவர்கள் கிண்டலடிப்பதும், அவமதிப்பதும் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது, பள்ளிச் சொத்துக்களை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்புடைய 10 மாணவர்களை இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.