மதிப்பெண் இல்லாத SSLC சான்றிதழ் : மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம்?

By: Udayachandran
16 June 2021, 12:01 pm
NO SSLC Marks - Updatenews360
Quick Share

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2020-2021 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்துவந்த சுமார் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ ஆகி உள்ளனர். தேர்ச்சி என்று அறிக்கப்பட்ட மாணவர்களுக்கு எஸ்எஸ்எல்சி சான்றிதழில் மதிப்பெண் எதுவும் வழங்கப்பட்டு இருக்காது. A,B,C,D,E என்பது போன்ற கிரேடுகளும் சான்றிதழில் குறிப்பிடப்படாது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

SSLC exam to be held in Tamil Nadu post-lockdown, says Minister - The  Federal

அதேநேரம் எஸ்எஸ்எல்சி சான்றிதழ் வழங்கும்போது, அதனுடன் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் ஒன்பதாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் பற்றி ஒரு குறிப்பை பள்ளியில் தருவார்கள். அதனடிப்படையில், மேல்நிலை பள்ளி மற்றும் பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதில் பல சிக்கல்களும் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. வழக்கம்போல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்த்தப்பட்டு இருந்தால் 95 முதல் 96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. அந்த அடிப்படையில் பார்த்தால், சுமார் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் கோட்டை விட்டிருப்பார்கள். 8 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி ஆகி இருப்பார்கள்.

இதனால் நன்றாக படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு இருந்தது. சிலர் ஒன்பதாம் வகுப்பு வரை சுமாராகப் படித்திருப்பார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் பிளஸ் 1-ல் தாங்கள் விரும்பும் பாடப் பிரிவை எடுப்பதற்காக மிகுந்த அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு முழு வீச்சில் தயாராவார்கள்.

இதுபோன்ற வாய்ப்பு தற்போது அவர்களுக்கு கை நழுவிப் போய் விட்டது. இப்படிப்பட்டவர்கள் ஒன்பதாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்தால் பிளஸ்-1 சேரும்போது, அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு கிடைப்பது கடினம். இதுபோல குறிப்பிட்ட சதவீத மாணவ-மாணவிகள் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பார்கள். இதனால் இவர்கள் இனி சராசரியாகப் படிக்கும் மாணவர்களுடன் போட்டிபோடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக, பத்தாம் வகுப்பு படித்து முடித்த அனைவருமே மேல்நிலைக் கல்விக்குசென்று விடுவதில்லை சுமார் 10 முதல் 15 சதவீதம் பேர் பத்தாம் வகுப்புடன் தங்களுடைய படிப்பை நிறுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்து படிக்கும் சிலர் கூட பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பைப் பாதியில் கைவிட்டு விடுகின்றனர். இதனால் மதிப்பெண் இல்லாத எஸ்எஸ்எல்சி சான்றிதழ்களால் அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக மாறலாம்.

Tamil Nadu SSLC Exams Starts Today

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் ஓரிரு வருடங்கள் கழித்து பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க விரும்பினால் ஏற்கனவே எடுத்த பாடப்பிரிவை தொடர முடியுமா? அப்போது மதிப்பெண் இல்லாத சான்றிதழை வைத்து பள்ளியில் சேர அனுமதிப்பார்களா? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.

மேலும் வெற்று எஸ்எஸ்எல்சி சான்றிதழை வைத்துக்கொண்டு அரசு பணிகளில் கருணை மற்றும் வாரிசு அடிப்படையிலோ அல்லது நேரடி நியமனமாகவோ எந்தப் பணியிலும் சேருவதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு குறைவு. ஏனென்றால் இவர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதியே எஸ்எஸ்எல்சி சான்றிதழ்தான். கிராம நிர்வாக அதிகாரி இளநிலை உதவியாளர் போன்ற குரூப்-IV பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க குறைந்தபட்சக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சிதான்.

இதனால் மதிப்பெண் இல்லாத சான்றிதழ் வைத்திருக்கும் பத்தாம் வகுப்பு படித்து முடித்தோர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் கூட புறக்கணிக்கப் படுவார்களோ என்கிற அச்சமும் இயல்பாகவே பெற்றோர் மத்தியில் எழுகிறது.

மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும் உணவு வழங்கல் துறை, காவல் துறை,கூட்டுறவுத் துறை போன்றவற்றிலிலும் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வைத்துத்தான்,பணி நியமனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும் அரசின் பல்வேறு துறைகளில் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில்தான் நேரடி பணிகளும் வழங்கப்படுகிறது.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடப்படவில்லை என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது.

இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளியில் தேர்வுகள் எதுவுமே நடத்தப்படவில்லை என்பதை காரணம் காட்டி ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பது, மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இருந்த போதிலும் பெற்றோருக்கு, இது பதற்றம் அடையச் செய்யும் ஒன்றாகத்தான் உள்ளது. மற்ற வகுப்புகளை போல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை சாதாரணமாக கருதிவிட முடியாது. ஏனென்றால் இந்த இரண்டின் அடிப்படையில் தான் மாணவர்களின் எதிர்காலமே தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் சரிபாதி பேருக்கு ஒன்பதாம் வகுப்பு தேர்வு பற்றிய கவலையோ, பயமோ இருக்காது. பத்தாம் வகுப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சம் அலட்சியமாகவே இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்கள் ஒன்பதாம் வகுப்பில் கவனம் செலுத்தி இருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

எஸ்எஸ்எல்சி சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாத நிலையில் இவர்களுக்கு எதிர்பார்த்த பிளஸ்-1 பாடப்பிரிவிலோ, பாலிடெக்னிக் கோர்ஸ்களிலோ சேர வாய்ப்பு கிடைக்காது. பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வினாத்தாள்கள் வேறு பள்ளிகளுக்கு திருத்த செல்லும்போது அங்கு மதிப்பீடு செய்து வழங்கப்படும் மதிப்பெண்கள் மீது ஒரு நம்பகத்தன்மை கிடைக்கும்.

TANSA: Allow limited staff at Secretariat to ensure safety - DTNext.in

மதிப்பெண் குறைந்தாலோ கூடுதலாக கிடைத்தாலோ மனம் ஆறுதல் அடைந்து விடும். ஆனால் தாங்கள் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் ஒன்பதாம் வகுப்பில் போட்ட மதிப்பெண்களை வைத்துத்தான் எதிர்கால படிப்பே என்கிறபோது அது பெரும்பாலான மாணவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். மேலும் மதிப்பெண் இல்லாத சான்றிதழ்களை வைத்து வேறு பள்ளிகளுக்கு மாற விரும்பினாலும் அதுவும் கஷ்டமே.

Class 10 board exams postponed in Tamil Nadu, Puducherry - DTNext.in

ஏனென்றால் ‘ஆல் பாஸ்’ என்பதால், தற்போது பத்தாம் வகுப்பில் எப்படியும் 50 ஆயிரம் பேர் வரை கூடுதலாக தேர்ச்சி அடைந்து இருப்பார்கள். இவர்களுக்கும் தாங்கள் படித்த பள்ளிகளில் இடம் கிடைக்கும் என்பதால் பிளஸ் 1 சேர்க்கையில் பலத்த போட்டி காணப்படும் என்பது உறுதி” என்று தங்களது கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

Views: - 206

0

0